Thursday, August 31, 2006

செ.அரங்கரின் தமாஷ் பேட்டி !

அ.தி.மு.க விலிருந்து சமீபத்தில் வெளியேறி இருக்கும் முன்னாள் அமைச்சர் செ.அரங்கநாயகம் ஜூ.வி க்கு பேட்டி அளித்துள்ளார்.

1. கட்சியை விட்டு வந்தீர்கள் சரி... மதம், ஆன்மிகம் என்று சொல்லி திராவிட இயக்கத்தின் அடிப்படையையே சந்தேகப்பட வைத்திருக்கிறீர்களே ...?

பதில்: சந்தேகமும் இல்லை. குழப்பமும் இல்லை. இந்தப் பத்தாண்டுகளில் எனக்குப் பல நூல்களை படிக்கும் வாய்ப்பு கிடைத்தது. சில விஷயங்களை, பிரச்சினைகளை ஆழமாகக் கவனித்தால், மதத்தின் அவசியமும், ஆன்மிகத்தின் அற்புதமும் புரிகிறது (இப்போதாவது புரிந்து கொண்டாரே !!!!)

பெரியாரே நாத்திகர் அல்ல என்பது என் கருத்து.
(வாசிக்கிற நீங்களெல்லாம் இப்ப நமுட்டுச் சிரிப்பு சிரிக்கணும், OK யா ;-))

அவர் முழு நாத்திகராக இருந்தால், முகமது நபியின் பிறந்த நாள் விழாவில் கலந்து கொண்டிருக்க மாட்டார். அரிஜன மக்களை கோயிலுக்குள் நுழைய அனுமதி கோரிப் போராடி இருக்கவும் மாட்டார்.
(வாசிக்கிற நீங்களெல்லாம் இப்ப சத்தமா சிரிக்கணும், OK யா ;-)) இட்லிவடை மாதிரி, உங்களையெல்லாம் சிரிக்கக்கூடாதுன்னு நான் சொல்லவே மாட்டேன் :)))

ஜாதி ரீதியாக உயர்வு தாழ்வு சொல்லி கோயில்களை நிர்வகித்ததைத் தான் அவர் எதிர்த்தார்
(இது எல்லாத்துக்கும் தெரிஞ்ச விஷயம் தானே !)

2. அடுத்து என்ன செய்யப் போகிறீர்கள், ஆன்மிகமா, அரசியலா ?

பதில்: ஆன்மிகத்தின் அவசியத்தைத் தொடர்ந்து வலியுறுத்துவேன். அரசியலிலும் செய்ய வேண்டியது நிறைய இருக்கிறது (?!).
(இதைப் படிக்கிற நீங்களெல்லாம் இப்ப அழ ஆரம்பிக்கணும், OK வா ;-))

ஆனால், எங்கிருந்து அதைச் செய்வது என்று முடிவு செய்யவில்லை
(இதைப் படிக்கிற நீங்களெல்லாம் இப்ப பேய் முழி பெருமுழி முழிக்கணும், OK வா ;-))

பேட்டி இனிதே முடிவடைந்தது :)

என்றென்றும் அன்புடன்
பாலா

நன்றி: ஜுனியர் விகடன்

Tuesday, August 29, 2006

திவ்ய தேச தரிசனம் 1 - திருக்கோழி (உறையூர்)

மஹாவிஷ்ணுவுக்கு உலகெங்கும் பல கோயில்கள் இருந்தாலும், திராவிட வேதம் என்றழைக்கப்படுகிற, பக்தி ரஸம் சொட்டும் ஆழ்வார் பாசுரங்களின் தொகுப்பான, நாலாயிர திவ்ய பிரபந்தத்தில் ஆழ்வார்களால் பாடப் பெற்ற (மங்களா சாசனம் செய்யப்பட்ட) திவ்ய தேசங்கள் எனப்படும் திருக்கோயில்கள் மொத்தம் 108 ஆகும். இவற்றில் 105 கோயில்கள், இந்திய துணைக்கண்டத்திலும், 1 (சாளக்கிராமம்) நேபாளத்திலும் உள்ளன. மற்ற இரண்டும் விஷ்ணுவின் விண்ணுலக உறைவிடங்களாக உருவகப்படுத்தப்பட்ட பரமபதமும் (வைகுந்தம்), திருப்பாற்கடலும் என்பது வைணவர்களின் நம்பிக்கை.

இவை வைணவத் திருப்பதிகள் என்றும் அழைக்கப்படுகின்றன. பூவுலகில் உள்ள 106 புனிதத்தலங்களில், 40 முந்தைய சோழ நாட்டிலும், 2 நடு நாட்டிலும் (கடலூர் அருகில்), 22 தொண்டை நாட்டிலும், 11 வட நாட்டிலும் (ஆந்திரா, உ.பி, குஜராத், நேபாளம்), 13 மலை நாட்டிலும் (கேரளம்), 18 பாண்டி நாட்டிலும் அமைந்துள்ளன. திவ்ய தேசங்கள் சிலவற்றில்(60) நின்ற திருக்கோலத்தோடும், சிலவற்றில்(27) கிடந்த திருக்கோலத்தோடும், சிலவற்றில்(21) வீற்றிருந்த திருக்கோலத்தோடும் மஹாவிஷ்ணு காட்சி தருகிறார்.

ஆழ்வார் என்ற சொல் 'இறையனுபவத்தில் திளைப்பவர்' என்பதை குறிக்கும். வைணவத்தில் பன்னிருவர், ஆழ்வார்கள் என்று அழைக்கப்படுகின்றனர். 5 முதல் 9-ஆம் நூற்றாண்டுகளுக்கு இடைப்பட்ட காலத்தில், இவர்கள் தென்னிந்தியாவின் பல இடங்களுக்கு தொடர்ந்து பயணித்தும், இறையன்பைத் தேக்கிய மிக அழகான, தத்துவார்த்தமான பாசுரங்களை இயற்றியும், பக்தி மார்கத்தை செம்மைபடுத்தி, மதச்சூழல் புதுப்பொலிவு பெறுவதற்கு காரணமாயினர் என்றால் அது மிகையில்லை. மிக முக்கியமாக, ஆழ்வார் பாசுரங்களில் சொல்லப்பட்டவை சாதி, இன வேற்றுமைகளுக்கு அப்பாற்பட்டவை, வைகுந்தன் மேல் ஒருவித அதிதீவிர அன்பையும் பூரண சரணாகதி தத்துவத்தையும் பறைசாற்றுபவை ! ஆழ்ந்த உணர்வுபூர்வமான இறையன்பை மட்டுமே முன் நிறுத்திய புது மதப்பாரம்பரியத்தை நிறுவியதில் ஆழ்வார்களே தலையானவர்கள் எனலாம். பல காலகட்டங்களில் வாழ்ந்த ஆழ்வார்களின் பாடல்களை தேடி எடுத்து அதை நாலாயிர திவ்யப்பிரபந்தம் என்ற தொகுப்பாக்கி, இசைப்படுத்திய பெருமை நாதமுனி என்ற பெருமகனாரைச் சாரும். இதற்காக, தன் வாழ்நாளில் பெரும்பகுதியை செலவிட்டவர் அவர் !

சோழ நாட்டில் அமைந்துள்ள வைணவ திவ்ய தேசங்களை குறித்து ஒரு தொடர் எழுதலாம் என்று எண்ணம். தொடரின் முதல் பதிவு இது. முதன்மையான திவ்ய தேசமான ஸ்ரீரங்கம் பற்றி பலரும் அறிந்திருப்பீர்கள். தேசிகனும் பல சமயங்களில் ஸ்ரீரங்கம் குறித்து தன் வலைப்பதிவில் எழுதியிருக்கிறார். எனவே, திருக்கோழி என்ற திருவுறையூர் கோயில் பற்றிய பதிவோடு இத்தொடரை ஆரம்பிக்கிறேன்.


*****************************
இக்கோயில், திருச்சியிலிருந்து மூன்று கிமீ தொலைவில் உள்ளது. இத்தலம், நிஷ¤லபுரி, ஊர்சடை என்றும் அழைக்கப்படுகிறது. இக்கோயிலின் நாயகர் அழகிய மணவாளன் எனப்படுகிறார், நின்ற திருக்கோலத்தில், கைகளில் சங்கு/ பிரயோக சக்கரம் தாங்கி அருள் பாலிக்கிறார். வீற்றிருந்த திருக்கோலத்தில் உள்ள தாயார், கமலவல்லி நாச்சியார் மற்றும் வாசவல்லி என்று அறியப்படுகிறார். திருமங்கையாழ்வாரும் (பாசுரம் 1762), குலசேகர ஆழ்வாரும் (பாசுரம் 662) இத்திருத்தலத்தை மங்களாசாசனம் செய்துள்ளனர். இங்குள்ள விமானமும், தீர்த்தமும் (குளம்) கல்யாண விமானம் மற்றும் கல்யாண தீர்த்தம் எனப்படுகின்றன. திருப்பாணாழ்வார் இங்கு தான் அவதரித்தார். அரங்கனை தரிசித்த திவ்ய அனுபவம் தந்த பேருவகையில், அவர் திருவாய் மலர்ந்தருளிய 'அமலனாதி பிரான்' பாசுரங்களுக்கு ஈடு இணை கிடையாது !
*****************************

அமலனாதிபிரானில் வரும் 3 அற்புதமான பாசுரங்களை கீழே தந்திருக்கிறேன். அரங்கனின் பேரெழில் அவர் உள்ளத்தை நிறைத்ததையும், அரங்கன் அவருள் புகுந்து அவரை ஆட்கொண்டதையும், அமுதை ஒத்த அரங்கனைக் கண்டபின் வேறெதையும் காணும் ஆசை அவரை விட்டு அகன்று விட்டதையும் ஆனந்தப் பெருக்கோடு சொல்லியிருக்கிறார்!

931@
பாரமாய* பழவினை பற்றறுத்து,* என்னைத்தன்-

வாரமாக்கி வைத்தான்* வைத்ததன்றி என்னுள் புகுந்தான்,*

கோர மாதவம் செய்தனன் கொல் அறியேன்* அரங்கத்து அம்மான்,*திரு-

வார மார்பதன்றோ* அடியேனை ஆட்கொண்டதே.

பதவுரை:
என்னுடைய முற்பிறவியின் பந்தங்களை நீக்கி, என்னை ஏற்றுக்கொண்டதோடு, என்னையும் ஆட்கொண்டவனும் ஆகிய திருவரங்கத்தில் வாழும் எம்பெருமானே! உன் திருமார்பில் அடியவனை சேர்த்துக் கொண்டதற்கு, என்ன பெருந்தவம் செய்தேன் என்று நான் அறியேன்!

935@..
ஆலமா மரத்தின் இலைமேல்* ஒரு பாலகனாய்,*

ஞாலம் ஏழும் உண்டான்* அரங்கத்து அரவின் அணையான்,*

கோல மாமணி ஆரமும்* முத்துத் தாமமும் முடிவில்ல தோரெழில்*

நீல மேனி ஐயோ. * நிறை கொண்டது என் நெஞ்சினையே.


பதவுரை:
ஆலிலைக் கண்ணனாய், சிறுவனாய், ஏழு உலகங்களையும் விழுங்கியவனும், சர்ப்பத்தில் பள்ளி கொண்டிருப்பவனும் பெரிய மணிகளால் ஆன ஆரமும், முத்து மாலையும் தன் நீலமேனியில் அணிந்தவனும் ஆகிய அரங்கநாதனின் ஒப்பற்ற/முடிவற்ற பேரழகு என் உள்ளத்தை முழுதும் வசப்படுத்தி விட்டதே!

936@..
கொண்டல் வண்ணனைக்* கோவலனாய் வெண்ணெய்-

உண்ட வாயன்* என்னுள்ளம் கவர்ந்தானை,*

அண்டர் கோன் அணி அரங்கன்* என் அமுதினைக்-

கண்ட கண்கள்,* மற்றொன்றினைக்* காணாவே.


பதவுரை:
கொண்டல் பூக்களின் நிறத்தை உடையவனும், ஆயர்பாடியில் வெண்ணெயை திருடி உண்டவனும், அண்டசராசரத்திற்கு அதிபதியும் ஆன அமுதத்தை ஒத்த அரங்கநாதனை தரிசித்த எனது கண்கள் வேறெதையும் காண விரும்பாதே!


***************************
இக்கோயிலின் (திருக்கோழி அல்லது மூக்கேஸ்வரம்) பெயர்க் காரணம் , ஒரு தைரியமான கோழி வலிமை பொருந்திய ஒரு யானையை தன் அலகால் கொத்தி விரட்டியடித்ததாகக் கூறப்படும் ஒரு பழங்கதையுடன் தொடர்புடையது. உறையூர் பண்டைய சோழர் தலைநகரமாக விளங்கியது. இக்கோயிலை கட்டியவர் நந்த சோழன் என்றும், அரசனின் மகளாக அவதரித்த மஹாலஷ்மி ரங்கநாதரை மணந்ததாகவும், அந்த வைபவத்தை கொண்டாடும் விதமாக அரசன் இக்கோயிலை கட்டியதாகவும் தலபுராணம் கூறுகிறது. கோயிலுள் நுழைந்தவுடன் காணப்படும் பெரிய மண்டபத்து தூண்களில் மிக அற்புதமான சிற்பங்கள் செதுக்கப்பட்டுள்ளன. ஆழ்வார்களுக்கும், வைணவ ஆச்சார்யர்களுக்கும் சன்னதிகள் உள்ளன. திருப்பாணாழ்வாருக்கு, தனியாக ஒரு சன்னதி திருக்குளத்தின் வடப்புறம் இருக்கிறது. இக்கோயிலின் பிரதான வாயில் வடக்கு (ஸ்ரீரங்கம்) நோக்கியுள்ளது.


பங்குனி மாத உத்சவத்தின் போது, ஸ்ரீரங்கத்திலிருந்து உத்சவ மூர்த்தியான நம்பெருமாள் (உறையூரில் மூலவர் மட்டுமே இருக்கிறார்) ஊர்வலமாக எடுத்து வரப்பட்டு, பங்குனி பூரத்தின் போது, கல்யாண உத்சவ வைபவம் விமரிசையாக நடைபெறுகிறது. திருப்பாணாழ்வார் உத்சவம் கார்த்திகையில் நடைபெறுகிறது.

****************************

என்றென்றும் அன்புடன்
பாலா

Sunday, August 27, 2006

பல்லவியும் சரணமும் II - பதிவு 9 - No Gimmicks

சில பழைய பாடல்களின் சரணங்கள் கீழே. பல்லவியையும், (முடிந்தால் திரைப்படத்தையும்) கண்டு பிடியுங்களேன்! விடைகள் நாளைய பதிவில், !!! தேவையிருந்தால் மட்டுமே!

ஓருவர் பின்னூட்டமிடும்போது, 4 அல்லது 5 சரணங்களுக்கான பல்லவிகளை மட்டும் பதியவும், அவருக்கு எல்லாவற்றுக்கும் விடை தெரிந்திருந்தாலும் கூட :-))

ஏனெனில், மற்றவர்களும் சற்று முயன்று பார்க்கட்டுமே!

3 பின்னூட்டங்களுக்குப் பிறகு, there are no regulations, it becomes a FREE FOR ALL!

**************************
1. நெஞ்சில் ஆசை வெள்ளம் பொங்கும் நேரம் இன்பம்

2. ஆடி மாதம் வைகையில் ஆடி வரும் வெள்ளமே

3. இமைப் பறவைகள் சிறகுகள் விரிக்கும்

4. ஆவாரம்பூவில் அது தேவாரம் பாட, இங்கே நான் காத்திருக்க

5. மரக்கிளையில் ஒரு குருவி கூடு கட்டி வாழ்ந்ததே

6. கானல் நீரால் தீராத தாகம் கங்கை நீரால்

7. நெஞ்சுலே நெருப்பை வச்சா நீரும் அணைக்க முடியுமா

8. நீலத்தை பிரித்து விட்டால் வானத்தில் ஏதுமில்லை

9. எல்லார்க்கும் தல மேலே எழுத்தொண்ணு உண்டு, என்னான்னு யார் சொல்லக் கூடும்

10. மீட்டி வரும் வீணை சொட்டவில்லை தேனை

11. கண்ணுக்கழகா பொண்ணு சிரிச்சா, பொண்ணு மனசை தொட்டு பறிச்சா...

12. இரு காதல் விழிகளில் வீசும் ஒளிகளில் இரவும் பௌர்ணமி ஆகும்
*******************************

என் பழைய நினைவுகளிலிருந்து சுரண்டி எடுத்துப் பதித்ததால், சொற்தவறுகள் இருக்கலாம்! மன்னிக்கவும், திருத்தவும்!

என்றென்றும் அன்புடன்
பாலா

Saturday, August 26, 2006

Maran vs Yechury

தொலைத்தொடர்புத் துறையின் விரிவாக்கத் திட்டங்கள் தாமதப்படுவது தொடர்பாக, வியாழக்கிழமை அன்று, ராஜ்யசபையில், அமைச்சர் தயாநிதி மாறனுக்கும், CPI(M) தலைவர் சீதாராம் யெச்சூரிக்கும் பலத்த வாக்குவாதம் நடந்தது ! அப்போது மன்மோகன்சிங்கும் அவையில் இருந்தார்.

தனியார் சேவையை ஒப்பிட்டு, BSNL மற்றும் MTNL ஆகியவற்றின் உருப்படியில்லாத சேவை பற்றி பல உறுப்பினர்கள் கேள்வி நேரத்தின் போது கவன ஈர்ப்பு எடுத்து வந்த போது, யெச்சூரி, தனியார் நிறுவனங்கள் லாபம் அடைவதற்காக, BSNL/MTNL நெட்வொர்க்கை விரிவுபடுத்துவதற்கான டவர்கள் நிறுவும் பணி வேண்டுமென்றே (deliberately) நடைபெறாமல் இருப்பதாக குற்றம் சாட்டினார் !

துள்ளியெழுந்த அமைச்சர், அத்தகவல் தவறு என்றும், யெச்சூரியின் பேச்சு அரசுப் பணியாளர்களை சோர்வடையச் செய்யும் வகையில் உள்ளதாகவும் பதிலுரைத்தார் ! யெச்சூரி, தான் ஏன் அவ்வாறு செய்ய வேண்டும் என்றும், தாங்கள் தான் தொலைத் தொடர்பு யூனியன்களை நடத்துவதாகவும், தான் கேட்டது, சில யூனியன்கள் தன்னிடம் முன் வைத்த புகாரை வைத்து தான் என்றும் கூறினார்.

திரு.மாறன் யெச்சூரி தான் கூறியதை எழுத்து வடிவில் (!) தர இயலுமா என்றும், தான் (மாறன்) பேசியதை யெச்சூரி காதில் வாங்கிக் கொள்ளவில்லை என்றும் சூடாகப் பேசினார் என்று தெரிகிறது. கடுப்பான யெச்சூரி, கேள்வி நேரம் முழுவதும் தான் அவையில் இருந்து கவனித்ததாகவும், அமைச்சரின் இத்தகைய மரியாதைக் குறைவான போக்கு சரியில்லை என்றார் !! உடன் இருந்த பிருந்தா கரத், " என்ன இது ? அமைச்சர் ஏன் இப்படி கூச்சலிடுகிறார் ?" என்று கூறினார் !!!

இந்த ரகளைக்குப் பின் யூனியன்கள் யெச்சூரிக்கு அளித்த தகவல்களை, தனக்குத் தெரியப்படுத்தினால், தான் அவை குறித்து விசாரணை நடத்தி, தக்க நடவடிக்கை எடுக்க ஏதுவாக இருக்கும் என்று யெச்சூரிக்கு அமைச்சர் கடிதம் ஒன்று எழுதியுள்ளதாகத் தெரிகிறது.

சில மாதங்களுக்கு முன், டாடாவை (யே!) மிரட்டினார் என்று ஒரு பிரச்சினை ! இப்போது இது ! நல்ல வேளை, யெச்சூரியை 'ஒண்டிக்கு ஒண்டி' வருமாறு அழைக்காமல் விட்டாரே ;-) யெச்சூரி வைகோ அல்லர் ! CPI(M)யை ஓவராக வெறுப்பேற்றினால், மத்திய அரசு கவிழும் அபாயம் உள்ளது ! அதனால், தாத்தா வாங்கித் தந்த அமைச்சர் பதவியும் பறி போகும் ! அப்படி, மத்தியில் ஆட்சி கலைய திமுக அமைச்சர் ஒருவர் காரணமாகி விட்டால், கலைஞர் அரசுக்கும் ஆபத்து தானே ! இன்னொரு தேர்தல் (அதற்கான பெரும் செலவு!) தற்போது நிச்சயம் தேவையற்ற ஒன்று தானே !

என்றென்றும் அன்புடன்
பாலா

பல்லவியும் சரணமும் II - பதிவு 9


***********************
பல்லவியும் சரணமும் பதிவுக்காக, பழைய பாட்டுக்களுக்கான பல்லவிகளுக்காகவும் அவற்றுக்கான சரியான சரணங்களுக்காகவும் என் ஞாபகங்களை அலசிக் கொண்டிருந்தபோது, தூக்கக் கலக்கமாய் இருந்ததால், நல்ல பல்லவிகள் நினைவுக்கு வந்தாலும், சரணங்கள் சட்டென்று பிடிபடாம்ல போயின. நல்ல சரணங்கள் நினைவுக்கு வந்தும், அவற்றுக்கான பல்லவிகள் தொண்டையில் சிக்கிக் கொண்டன. "என்னடா வம்பாப் போச்சு" என்று அலுத்துக் கொண்டபோது, பளிச்சென்று நினைவில் தோன்றிய பல்லவியும் சரணமும், உங்கள் பார்வைக்கு ;-))
************************
இதோ அந்த பல்லவி !





இதோ சரணம் !

மயில்நட மிடுவாய் மலரடி சரணம்! சரணம் சரணம் சரவண பவஓம் சரணம் சரணம் சண்முகா சரணம்! ...

கோபப்பட மாட்டியள் எண்டு நினைக்கிறேன் :)

என்றென்றும் அன்புடன்
பாலா

Thursday, August 24, 2006

கறுப்பு தான் எனக்குப் பிடிச்ச கலரு !

கடலூரில் நடந்த பொதுக்கூட்டத்தில் பேசிய Dr.ராமதாஸ், வீரப்ப மொய்லி பிற்பட்ட வகுப்பைச் சேர்ந்தவராக இருந்தும், இடஒதுக்கீட்டில் அவரது நிலைப்பாடு பிற்பட்டவருக்கு எதிராக இருப்பதாகவும், அதனால் அவர் தமிழ்நாட்டுக்கு இனி வருகை தரும்போது அவருக்கு எதிராக பாமக கறுப்புக்கொடி ஆர்ப்பாட்டம் நடத்தும் என்றும் கூறினார். சிறிது காலத்திற்கு முன் கறுப்பு பெயிண்ட் பூசி கலாட்டா, இப்ப கறுப்புக்கொடி ! வீரப்ப மொய்லிக்கு கறுப்புக் கொடி காட்டினால், தமிழக காங்கிரஸ்காரர்கள் சும்மா இருப்பார்களா என்று பார்க்க வேண்டும் !

மேலும், வீரப்ப மொய்லி க்ரீமி லேயரை இடஒதுக்கீட்டிலிருந்து தள்ளி வைக்க முயன்றதாகவும், அன்னை சோனியாவின் தலையீட்டால் தான், க்ரீமி லேயரின் தலை தப்பியது என்ற தகவலையும் ஐயா அளித்தார். க்ரீமி லேயர் க்ரீமி லேயரை ஆதரிப்பதில் ஆச்சரியம் ஒன்றுமில்லை தானே !!! மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் இடஒதுக்கீட்டு விவாதத்தின்போது எதுவும் பேசாமல் மௌனமாக இருந்தது, தமிழக மக்களுக்கு அவர் இழைத்த துரோகம் என்று ராமதாஸ் கூறினார். ஐயா ஏதோ முடிவில தான் இருக்கார் போல இருக்கு ! ஒரு கூட்டணிக் கட்சியின் அமைச்சராகிய சிதம்பரத்திடம் இது குறித்து பேசித் தெளிவதற்கு முன், இவ்வாறு ராமதாஸ் பேசியிருக்க வேண்டாம் எனத் தோன்றுகிறது.

அடுத்து, கூட்டணிக் கட்சிகளுக்கு மொத்தமாக ஒரு வெடி வைத்தார் ! பா.ம.கவைத் தவிர, மற்ற கட்சிகள் 'கூட்டணி தர்மத்தை' கடைபிடிக்காததால் தான், பாமக கிட்டத்தட்ட 13 இடங்களில் தேர்தலில் தோற்றது என்றும், முக்கியமாக விருத்தாசலம் (கேப்டனை இனிமேல் யாரும் அங்கே அசைக்க முடியாது போலத் தெரிகிறது!) மற்றும் புவனகிரி ஆகிய பாமக கோட்டைகளில் தன் கட்சி தோற்றது என்றும் கூறினார். மேலும் திமுக வேட்பாளர்களான ஆதிசங்கரும், வெங்கடபதியும், பாமகவின் ஆதரவால், அவர்கள் வன்னியராக இல்லாத போதும் வன்னியர் அதிகம் வாழும் தொகுதிகளில் வெற்றி பெற்றதாக (இதில் பெருமிதம் கொள்ள என்ன இருக்கிறது என்று விளங்கவில்லை!!!) கூறினார்.

ஜனநாயக முற்போக்குக் கூட்டணியில் விரிசலுக்கான ஆரம்ப அறிகுறிகள், இவ்வளவு சீக்கரமாகவா ??? மக்கள் வரிப்பணத்தை விரயம் பண்ணி இன்னொரு தேர்தல் தேவையா ? கஷ்டமோ, நஷ்டமோ, அட்ஜஸ்ட் பண்ணி கூட்டணிக் கட்சிகள் ஒற்றுமையா இருந்தா நல்லது :)

என்றென்றும் அன்புடன்
பாலா

Wednesday, August 23, 2006

மனதை பதற வைக்கும் ஒரு துயரம்

எவ்வளவு பேர் இது குறித்த செய்தியை வாசித்தீர்கள் என்று தெரியவில்லை ? சமீபத்தில் ராஜஸ்தானில் நிகழ்ந்த மழை வெள்ளப் பெருக்கில், ஒரு குடும்பத்தைச் சேர்ந்த ஐவர், கிட்டத்தட்ட எட்டு மணி நேரம் சிக்கித் தவித்து, உயிருக்குப் போராடி, பின்னர் ஒருவர் பின் ஒருவராக, கரையில் நின்றபடி ·பால்னா என்ற ஊரின் மொத்த மக்களும் அரசு இயந்திரமும் பார்த்துக் கொண்டிருக்க, வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டனர் ! தங்களை எப்படியாவது காப்பாற்றும்படி, அவர்கள் கதறியும், வெள்ளத்தின் வேகத்தைக் கண்டு அஞ்சி, ஒருவரும் முன் வரவில்லை. வேடிக்கை பார்த்தவர்களில், ராஜஸ்தான் அமைச்சர் லஷ்மி நாராயண் தேவும் ஒருவர் !

அவ்வழியாக சென்று கொண்டிருந்த இரு இந்திய ராணுவ வீரர்கள் தைரியமாக வெள்ளத்தில் குதித்து அவர்களை காப்பாற்ற முயற்சித்தனர். ஒரு வீரர் தண்ணீரில் மூழ்கி அடித்துச் செல்லப்பட்டார். இன்னொருவர் தண்ணீர் வடிந்த பின் மீட்கப்பட்டதாக தெரிகிறது. மேலே சொன்ன ஐவர், ஒரு பாலத்தை கடப்பதற்காக, காரில் சென்றபோது, காரி நதியின் வெள்ளப்பெருக்கில் சிக்கினர் என்று தெரிகிறது. கார் பாலத்தின் மேல் சென்றபோது, சில நொடிகளில், மூழ்கி விட்டது. காரின் மேல் கூரையில் ஏறிய ஐவரும் உதவிக்காக கூக்குரலிட்டனர். ஒரு மணி நேரத்தில் வந்த போலீசார், மீட்பதற்கு வேண்டிய உபகரணங்கள் எதையும் எடுத்து வரவில்லை என்பது பெரிய கொடுமை. அரசு அதிகாரிகளும் அவ்விடத்திற்கு வந்து, என்ன செய்வது என்று புரியாமல் நின்று கொண்டிருந்தனர். வெள்ளப்பெருக்கின் வேகம் மிக அதிகமாக இருந்ததால், நீரில் குதிப்பதற்கு யாருக்கும் தைரியம் வரவில்லை.

மக்களில் சிலர் சிக்கியிருந்தவரை நோக்கி கயிற்றை வீசினர். நதியின் அகலம் கிட்டத்தட்ட 200 அடி இருந்ததால், அதுவும் பயனில்லாமல் போயிற்று. வெள்ள நீரின் மட்டம் உயர உயர, அந்த ஐவரும் ஒருவரை ஒருவர் கட்டிப் பிடித்தபடி, கரையில் இருந்த மக்களை காப்பாற்றும்படி கெஞ்சினர். மக்களில் சிலர், பல பிளாஸ்டிக் குழாய்களை ஒன்றாக இணைத்து அவர்களை மீட்க எடுத்த முயற்சியும் தோல்வியில் முடிந்தது. படை சூழ வந்த அமைச்சரும் கையை பிசைந்தபடி இவையனைத்தையும் பார்த்துக் கொண்டிருந்தார். அந்தி சாயும் நேரம், ஐவரில் ஒரு வாலிபர் தடுமாறி நீரில் விழுந்து மறைந்தார். மகனை மீட்க அவன் பின்னே குதித்த அவனது தந்தையும் மூழ்கினார். மற்ற மூவரும், மனதை உருக்கும் கூப்பாடுகளுக்கிடையில், ஒருவர் பின் ஒருவராக வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டனர் ! இறை தரிசனத்துக்காக பயணப்பட்டவர்களை, எமன் கூட்டிச் சென்றது என்ன ஒரு அநியாயம் பாருங்கள் !

ராஜஸ்தான் அரசின் தலைமைச் செயலாளர், விமானப்படையை தொடர்பு கொண்டு, ஹெலிகாப்டரை அனுப்பும்படி கேட்டுக் கொண்டதாகத் தெரிகிறது. மேக மூட்டத்தினால், ஹெலிகாப்டர் வருவது தடைபட்டு விட்டதாம். ஜோத்பூரிலிருந்து ஒரு ராணுவ அணி அனுப்பப்பட்டதாகவும், அதுவும், போக்குவரத்து நெரிசலில் சிக்கி, சம்பவ இடத்திற்கு வர இயலாமற் போனதாகவும் தெரிகிறது.

இவையெல்லாம் வெறும் சப்பைக்கட்டாகவே தோன்றுகிறது. இதே ஒரு அரசியல்வாதியோ அவரின் நெருங்கிய உறவினரோ இவ்வாறு சிக்கிக் கொண்டிருந்தால், அரசு காப்பாற்ற பெரு முயற்சி எடுத்திருக்கும். எட்டு மணி நேரத்தில், எதுவும் செய்ய இயலவில்லை என்பதை அவ்வளவு எளிதாக ஒப்புக் கொள்ள முடியவில்லை ! என்ன தொழில்நுட்ப வளர்ச்சி, பொருளாதார முன்னேற்றம் ஏற்பட்டு என்ன பயன் ? 480 நிமிடங்கள் இருந்தும், ஐந்து உயிர்களை காப்பாற்ற ஒரு இழவும் செய்ய இயலா ஒரு சூழலில் !!!


என்றென்றும் அன்புடன்
பாலா

Tuesday, August 22, 2006

+/- குத்து, பின்னூட்டம், பதிவுத்தலைப்பு - Jolly Tips

************************
தமிழ்மணம் '+/-' ரேட்டிங் வசதியை வழங்கியது, பதிவர்கள் வாசிக்கத்தக்க பதிவுகளை பரிந்துரைப்பதற்காக என்பது என் எண்ணம். ஆனால், அது எவ்வாறு பயன்படுத்தப்படுகிறது ? தங்களுக்கு ஒவ்வாத கருத்துக்கள் உடைய பதிவுகளுக்கு '-' போட்டு, அப்பதிவுகள் பரிந்துரைக்கப்பட்ட பதிவுகள் பட்டியலில் வராமல் பார்த்துக் கொள்வதில் போய் முடிகிறது !!! பதிவரின் கருத்துக்கள் விவாதத்திற்குரியவை என்றால், தங்களது எதிர்கருத்துக்களை பின்னூட்டமாக இடலாமே ! ஜனநாயகத்தில் விவாதம் அவசியமானது இல்லையா ? அதை விடுத்து "-" போட்டுத் தாக்குவது சரியில்லை.

தனிமனிதத் தாக்குதல் / வசைகள் / அருவருக்கத்தக்க கருத்துக்கள் கொண்ட பதிவுகளுக்கு, வாசகர் கண்டிப்பாக '-' இட்டு, கண்டனத்தை தெரிவித்தால் நல்லது. அத்தகைய பதிவுகளை பின்னுட்டமிடாமல் நிராகரித்தாலே போதும். பதிவர் புரிந்து கொள்வார் என்று நினைக்கிறேன் ! ஊக்கமளிப்பதால் தான் பிரச்சினைகள் பூதாகரமாகின்றன.

புதிதாக வரும் பதிவர்களுக்கு பின்னூட்டமிட்டு அவர்களைஊக்குவிக்கலாம். அவர்கள் மேலும் சிறப்பாக எழுத அது உதவும்.

சீரியஸ் மேட்டர் முடிந்தது, இப்ப கொஞ்சம் ஜாலியா சில கருத்துக்கள் :)

1. ஒரு பதிவை படிச்சுட்டு, ஒண்ணுமே தோணலன்னா, பதிவை மறுபடியும் வாசியுங்கள், ஏதாவது உள்குத்து இருந்தா புரிய வாய்ப்பிருக்கு ! பதிவின் தலைப்பை நன்றாக உள்வாங்கிக் கொள்ளுங்கள் ! அப்படியும் புரியலன்னா, நீங்க ஒரு வெண்குழல் விளக்கு தான் :) அல்லது வலைப்பதிவுலகம் பற்றி சரியா இன்னும் தெளியலேன்னு அர்த்தம் ! தெரிந்தோ தெரியாமலோ, சக வலைப்பதிவர் ஏதாவது சொல்லி ஏடாகூடமாக மாட்டினார்னா, உடனே அவரை "இது நியாயமா, தர்மமா, அடுக்குமா?" என்று கேள்வி கேட்டு ஒரு பதிவு போடுங்கள் ! உடனே, பதிவைச் சுத்தி கூட்டம் அம்மும் :) இது தான், இப்ப லேட்டஸ்ட் டிரெண்ட் ;-)

2. உங்களோட கூட்டாளியோட பதிவாயிருந்தால், "சூப்பர் மாமூ" அல்லது "கலக்கிட்டியே சந்துரு" என்று போட்டு கீழே "நமீதா ரசிகர் மன்றம்" அல்லது "சிம்ரன் ஆப்பக்கடை, துபாய்" (பதிவுக்கு சம்பந்தமா என்றெல்லாம் யோசிக்க வேண்டியதில்லை!) என்று குறிப்பிடுங்கள்.அலம்பல் செய்வதற்கென்றே அலைந்து கொண்டிருக்கும் அனானிக் கூட்டம் will take over :) "நீ உருப்பட மாட்டே", "நீ மட்டும் உருப்படுவியா?", "நான் உருப்பட்டாலும், நீ உருப்படவே மாட்டே", என்று பலவிதமான பெயர்களில் (தலையெழுத்துப் பிழை, சனீஸ்வர குய்ராலா, நாதாரி, கபோதி, சொர்ணமால்யா, புலிகேசி ....) அனானிகள் தொடர்ந்து பின்னூட்டி, உங்கள் பதிவு, "அண்மையில் மறுமொழியப்பட்ட இடுகைகள்" பகுதியில் டாப்பில் இருக்குமாறு பார்த்துக் கொள்வர் ;-)

3. பதிவின் தலைப்பில், வள்வள், கழிவு, கேவலம், ஜொள்ளு, கருப்பு, பாப்பான், போலி, டோண்டு போன்ற சொற்கள் இருந்தா, வாசகரை சும்மா காந்தம் மாதிரி பதிவு பக்கம் இழுக்கலாம் ;-) நெறய பின்னூட்டங்களும் கிடைக்கும், பிளாக் கவுண்டர் (Blog counter) வச்சிருந்தா பிச்சுக்கிட்டு ஓடும்
!!!

4. பின்னூட்டக் கயமைத்தனம் நெறய செய்யுங்கள் : அதான், 'நன்றி', 'மறுபடியும் நன்றி', 'ஆ, சொல்ல மறந்துருச்சு', 'வாங்க, வாங்க' போன்றவை !!! ஒவ்வொரு பின்னூட்டத்துக்கும் தனித்தனியா (டைம் கேப் விட்டு) நன்றி சொல்லுங்க ! அதே மாதிரி, டைம் கேப் விட்டு, உங்களுக்கு வந்த பின்னூட்டங்களை ஒவ்வொண்ணா பப்ளிஷ் பண்ணனும், புரியுதா ??? அப்ப தான், மறுமொழியப்பட்ட ஆக்கங்கள் பகுதியை நீங்க ஆதிக்கம் பண்ணலாம் ;-)

5. நடுநிலையோடு ஒரு பிரச்சினையின் இரு பக்கங்களையும் ஆய்ந்து, மறந்தும் கூட ஒரு பதிவு போட்டு விடாதீர்கள். அதே போல், எதிராளி சொல்வதில் ஏதாவது சங்கதி உள்ளதா என்றெல்லாம் பார்த்து டைம் வேஸ்ட் செய்யாதீங்க ! Chances are, உங்களை யாரும் சீந்த மாட்டார்கள் !!! ஒரு பக்கத்தை பிடித்துக் கொண்டு தொங்குவது தான் உங்களுக்கு celebrity status தரும் ;-)

6. மேலே சொன்னவை எதுவும் (அதிக பின்னூட்டங்கள் பெற!) வொர்க் அவுட் ஆகலேன்னா, நேரா டோண்டுவின் ஏதாவது ஒரு பதிவுக்குப் போய் 'நல்ல பதிவு' ன்னு மட்டும் கமெண்ட் போடுங்க, அவ்வளவு தான், நீங்களே நினைச்சு பார்க்காத அளவுக்கு, டோண்டுவின் 'நெருங்கிய நண்பர்' உங்களுடைய எல்லா பதிவுகளிலும், பின்னூட்ட மழை பொழிவார் ;-) வாழ்த்தி, நெறய தனிமடல்களும் அனுப்புவார் :)

இந்த பதிவுக்கு, + அல்லது -, ஏதோ ஒண்ணு குத்துங்க, ஒங்க இஷ்டப்படி :)
என்ன, ஜோதியிலே ஐக்கியமாகத் தான் இந்த பதிவே :)

என்றென்றும் அன்புடன்
பாலா
***********************************

Monday, August 21, 2006

இடஒதுக்கீடு அமல் - 2

பார்க்க:
"இடஒதுக்கீடு அமுல் - வீரப்ப மொய்லி"

********************
சிறிது நேரத்திற்கு முன் இடஒதுக்கீடு குறித்து ND TV-யில் Flash செய்திகள் பார்த்தேன். அதை பகிர்ந்து கொள்கிறேன்.

*********************
1. 27% இடஒதுக்கீட்டை நடைமுறைப்படுத்துவதற்கு மத்திய அமைச்சர் குழு (Cabinet) ஒப்புதல் அளித்துள்ளது

2. வீரப்ப மொய்லி CNN-IBN பேட்டியில் கூறியது போல, இடஒதுக்கீடு பல கட்டங்களில் (in phases) நிறைவேற்றப்படுகிறது

3. க்ரீமி லேயர் இடஒதுக்கீட்டிலிருந்து விலக்கப்பட்டுள்ளது

4. முதல் கட்டத்தில் அரசு சார்ந்த கல்வி நிறுவனங்களில் மட்டுமே, இடஒதுக்கீடு அமலுக்கு வருகிறது.

5. ஆகஸ்டு 25ஆம் தேதி, இடஒதுக்கீட்டிற்கான மசோதா பாராளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படுகிறது.

********************

என்றென்றும் அன்புடன்
பாலா

Sunday, August 20, 2006

பல்லவியும் சரணமும் II - பதிவு 8

சில பழைய பாடல்களின் சரணங்கள் கீழே. பல்லவியையும், (முடிந்தால் திரைப்படத்தையும்) கண்டு பிடியுங்களேன்! விடைகள் நாளைய பதிவில், !!! தேவையிருந்தால் மட்டுமே!

ஓருவர் பின்னூட்டமிடும்போது, 4 அல்லது 5 சரணங்களுக்கான பல்லவிகளை மட்டும் பதியவும், அவருக்கு எல்லாவற்றுக்கும் விடை தெரிந்திருந்தாலும் கூட :-))

ஏனெனில், மற்றவர்களும் சற்று முயன்று பார்க்கட்டுமே!

3 பின்னூட்டங்களுக்குப் பிறகு, there are no regulations, it becomes a FREE FOR ALL!

1. அட நான் சொல்வது உண்மை அதை நம்பினால் நன்மை

2. தாய் என்னும் பூமாலை தரை மேலே வாடுதே

3. செவந்த முகம் கண்டு என் மனசு பதறுது

4. நீ புதிதாய் பிறப்பது எப்பொழுது

5. தப்புக் கணக்கை நாளும் படிச்சேன்

6. வான் நிலவை நீ கேளு கூறும் என் வேதனை

7. காற்றைப் போல வந்து கண்கள் மெல்லத் திறந்தேன்

8. சுகமான உன் மேனி பாடல்

9. கம்பளி போர்த்தும் கருணை ஆனந்தம்

10. நாகரீகம் பார்த்தால் நடக்காது பூஜை

11. சிலையாக நாம் நிற்பதே அற்புதம் ...

12. பலப்பல ஜென்மம் நான் எடுப்பேன், பாடல்கள் கோடி ...

என் பழைய நினைவுகளிலிருந்து சுரண்டி எடுத்துப் பதித்ததால், சொற்தவறுகள் இருக்கலாம்! மன்னிக்கவும், திருத்தவும்!

என்றென்றும் அன்புடன்
பாலா

Thursday, August 17, 2006

இஸ்ரேல் vs ஹெஸ்பொல்லா

இஸ்ரேலுக்கும், லெபனானின் ஹெஸ்பொல்லாவுக்கும் இடையே நடந்து வந்த சண்டை ஓய்ந்து, UN தலையீட்டாலும் (US அனுமதித்ததாலும்!) தற்காலிகமாக போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், இப்பிரச்சினை குறித்து ஒரு பார்வை.

முதலில், இரண்டு ராணுவ வீரர்களை மீட்பதற்காக ஒரு நாடு போர் தொடுப்பது என்பது சற்று அதிகமானது ! மேலும், போரின் முடிவில் இஸ்ரேல் அவர்களை மீட்க முடிந்ததா என்பது தெரியவில்லை ! ஹெஸ்பொல்லாவினால் இஸ்ரேலுக்கு எந்தவித ஆபத்தும் எக்காலத்திலும் ஏற்படக்கூடாது என்று கூறிக் கொண்டு, இஸ்ரேல் நடத்திய குண்டு வீச்சுகள், பல அப்பாவி மக்களையும் குழந்தைகளையும் பலி கொண்டது அமைதி விரும்பும் அனைவரையும் மிகுந்த வேதனைக்குள்ளாக்கியது.

இதற்கு முன் இஸ்ரேல் நிகழ்த்திய போர்களூக்கு ஓரளவு நியாயமான காரணங்கள் இருந்தன. இப்போது நிச்சயம் கிடையாது ! எப்போதும் போல அமெரிக்கா இஸ்ரேலை ஊக்குவித்து அதில் குளிர் காய்ந்தது. எதேச்சாதிகார புஷ், எதிர்பார்த்தது போலவே, "இது அமைதிக்காக நடத்தப்படும் யுத்தம்" என்று இப்போரை வர்ணித்தார் ! இராக்கில் தங்களால் முழுமையாக செய்ய முடியாததை, லெபனானில் இஸ்ரேலாவது செய்யட்டுமே என்ற அமெரிக்க "நல்லெண்ணமும்" இதற்குக் காரணம் !

நமது இந்திய தொலைக்காட்சி ஊடகங்கள் இப்போர் பற்றிய செய்திகளை பொதுவாக புறக்கணித்ததாகவே தோன்றியது. "Breaking News" என்று போட்டு கவைக்குதவாத செய்திகளை மக்களுக்கு வழங்குவதே இவற்றின் தலையாய பணிகளில் ஒன்று ! செய்திகள் குறித்த ஆய்வு (Analysis) எனபது நடைபெறுவதில்லை. நாமும், கொட்டக் கொட்ட அவற்றைப் பார்க்கிறோம் !

ஹெஸ்பொல்லா நிகழ்த்திய ராக்கெட் தாக்குதல்களில், இஸ்ரேலின் வடக்குப்பகுதியான ஹை·பாவில் பொதுமக்கள் பலியாயினர். இஸ்ரேலுக்கும் இழப்பு தான் என்றாலும், இப்போரினால், இப்போது தான் பொருளாதார நிலை சற்றே சீரடைந்து வரும் லெபனானுக்கு, இழப்பு பலப்பல மடங்கு என்றே கூற வேண்டும். லெபனானின் பன்னாட்டு விமான நிலையம், பெட்ரோலிய ஆலைகள், மின் உற்பத்தி நிலையங்கள் என்று பல இடங்கள் குண்டு வீச்சினால் தரைமட்டமாக்கப்பட்டன.

தம் மக்களுக்கு ஏற்படக்கூடிய அவல நிலையையும், உயிரிழப்புகளையும் கருத்தில் கொண்டாவது, ஹெஸ்பொல்லா சற்று முன்னதாகவே பேச்சு வார்த்தைக்கு வந்திருக்க வேண்டும். ஏன் இப்படிக் கூறுகிறேன் என்றால், அதி நவீன தொழில்நுட்பத் தடவாடங்களின் துணையுடன் வரும் இஸ்ரேலை, ஹெஸ்பொல்லா ராக்கெட்டுகள் கொண்டு எத்ர்த்துப் போரிட்டதால், லெபனானுக்கும், அதன் மக்களுக்கும் ஏற்பட்ட இழப்புகளும், வலியும், மிக மிக அதிகம் ! ஆனால், தீவிரவாதத்தில் நம்பிக்கை வைத்துள்ளவர்களிடம் அவ்வாறு எதிர்பார்க்க முடியாது ! மேலும், இப்பிரச்சினையில் சம்பந்தப்பட்ட அனைவருமே அப்பாவி மக்களின் உயிர்களை பணயம் வைத்து அரசியல் செய்பவர்கள் தானே !!!

போர் தொடங்குவதற்கு முன், ஹெஸ்பொல்லாவிடம் இருக்கும் ராணுவத் தளவாடங்களை பறிமுதல் செய்யும்படி, லெபனான் நாட்டு ராணுவத்தை இஸ்ரேல் வலியுறுத்தியது உண்மை தான். ஆனால், அவ்வாறு செய்ய முடியாத நிலையில் லெபனான் ராணுவம் இருந்தது / இருக்கிறது என்பதும் உண்மையே ! இஸ்ரேலியத் தாகுதல்களால், லெபனானில், ஹெஸ்பொல்லா எதிர்ப்பாளர்கள் கூட பெருமளவு ஆதரவாளர்களாக மாறி விட்டனர். மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட லெபனான் அரசு தற்போது பலமிழந்து, ஹெஸ்பொல்லா இயக்கம் இன்னும் ஆழமாக வேரூன்றுவதற்கு இப்போர் வழி செய்ததுடன், நிரந்தமான நல்லிணக்கமும், அமைதியும் ஏற்படக் கூடிய சூழலை பல ஆண்டுகளுக்கு பின்னுக்குத் தள்ளி விட்டது ! மிக நிச்சயமாக, இப்போர் இஸ்ரேலுக்கு வெற்றியைத் தரவில்லை ! இதனால் ஏற்படவிருக்கும் பாதகங்கள் தான் அதிகம் !

போர் உச்சத்தில் இருந்தபோது, கோண்டோலீசா ரைஸ் (Condoleezza Rice) இப்பிரச்சினையை, "ஒரு புது மத்திய கிழக்கு பிறக்கும் சமயம் ஏற்படும் பிரசவ வலி" என்று வர்ணித்தார் ! ஆனால், இந்த "புது மத்திய கிழக்கு" (இராக் போலவே!) அமெரிக்க நலத்தை அழிவுப் பாதைக்கு இட்டுச் செல்ல வல்லதாகவே தோன்றுகிறது !

பி.கு: ராக்கெட் மழை பொழிந்த ஹை·பாவுக்கு (Haifa) 2 ஆண்டுகளுக்கு முன் வேலை நிமித்தம் சென்றிருக்கிறேன். ஆனால், அப்போது சாதா மழை தான் பெய்தது ! கடல் மட்டத்திலிருந்து 5000 அடிக்கு மேல் அமைந்த மலைப்பாங்கான, குளிர்ச்சியான, ரம்யமான ஊர் அது. பஹாயி (Bahaii) சமயத்தின் தலைமையிடமாகவும், பஹாயினரால் புனித பூமியாகவும் ஹை·பா கருதப்படுகிறது. அங்கே, என்னுடன் மிகுந்த நட்புடன் பழகிய இஸ்ரேலிய நண்பர்களும் அவர்களின் குடும்பத்தாரும் நலமாக இருக்கிறார்கள் என்ற செய்தி மிகுந்த ஆறுதலை அளிக்கிறது.

என்றென்றும் அன்புடன்
பாலா

Tuesday, August 15, 2006

சிதம்பரத் தீர்ப்பும் குட்டிக் கதையும்

சிதம்பரம் கோயிலில் திருச்சிற்றம்பலத்தில் ஆறுமுகச்சாமி "தமிழில்" சைவ திருப்பாடல்கள் பாடுவதற்கு எதிராக தீட்சிதர்கள் வழக்கு தொடர்ந்ததை அடுத்து, இடைக்கால தடையுத்தரவை நீதிமன்றம் வழங்கியது. இத்தீர்ப்பு குறித்து நண்பர் ஒருவரின் பதிவு அளித்த ஊக்கத்தின் விளைவே இக்குட்டிக்கதைப் பதிவு !

ஒரு மாணவன் தேர்வுக்கு வேண்டி, பசுமாடு பற்றி விளக்கமாக இவ்வாறாகப் படித்தான்,

1. பசுவிற்காக மற்றொரு தமிழ்ச்சொல் 'ஆ'

2. பசு புல், வைக்கோல் போன்றவற்றை உண்டு மனிதர்களுக்கு இன்றியமையாத உணவாகிய பாலைத் தருகிறது.

3. பசு நான்கு கால்களும், இரண்டு கொம்புகளும் உடையது, சாதுவான பிராணியும் கூட !

4. பசுவின் பாலிலிருந்து உருவாகும் நெய், தயிர் போன்றவை சுவையாகவும், ஆரோக்கியம் தருபவையாகவும் உள்ளன.

5. பசுவை இந்துக்கள் தெய்வமாகக் கொண்டாடுகிறார்கள்.

6. அதனால், பொதுவாக, இந்துக்கள் பசு மாட்டிறைச்சியை உண்பதில்லை

7. புதுமனை புகுவிழாவிற்கு பசு கூட்டி வரப்பட்டு அதற்கு பூசை செய்யப்படுகிறது.

இப்படியாக, பசுவைப் பற்றிய (பலர் அறிந்த, அறியாத!) பலப்பல விஷயங்களை நெட்டுரு போட்டு விட்டு, தேர்வுக்குச் சென்ற அம்மாணவனுக்கு பெரிய அதிர்ச்சி ! கேள்வித் தாளில் தென்னை பற்றி கட்டுரை எழுதுமாறு கேட்கப்பட்டிருந்தது ! சற்றே யோசித்த அந்த 'புத்திசாலி' மாணவன், கிடுகிடுவென்று பசுவைப் பற்றி தான் படித்து வைத்திருந்ததை ஒன்று விடாமல் எழுதி விட்டு, முத்தாய்ப்பாக, "அத்தகைய சிறப்புகளை பெற்ற பசுவானது, அழகான தென்னை மரத்தில் கட்டப்பட்டிருந்தது!" என்று கட்டுரையை நிறைவு செய்தான் !

ஆக, பசுவைப் பற்றி தனக்குத் தெரிந்ததை எழுதிய மாதிரியும் ஆயிற்று, தென்னையைப் பற்றிய கட்டுரை எழுதிய திருப்தியும் ஏற்பட்டது அம்மாணவனுக்கு !!! மாணவனின் சமயோஜிதத்தையும், கெட்டிக்காரத்தனத்தையும் வியந்து பாராட்டி, ஆசிரியர் அக்கட்டுரைக்கு அதிக மதிப்பெண்கள் வழங்கினார் ! இன்ன பிறரும் அவனைப் பாராட்டினார்கள் !

பி.கு: குட்டிக்கதையை எழுதி முடித்து விட்டு ஏதோ ஒன்று எழுத நினைத்தது மறந்து விட்டதே என்று நினைத்தேன் ! யோசித்தேன், அது இது தான் .... அம்மாணவனின் பெயர் 'அம்பேத்கார்' !!!!

என்றென்றும் அன்புடன்
பாலா

Sunday, August 13, 2006

இடஒதுக்கீடு அமுல் - வீரப்ப மொய்லி

27% இடஒதுக்கீட்டை நடைமுறைப்படுத்துவதில் அரசியல் கட்சிகளிடையே கருத்து வேறுபாடும், பொதுவாக குழப்பமும் நிலவும் நிலையில், CNN-IBN தொலைக்காட்சியில் கரண் தபாருடனான ஒரு நேர்முகப் பேட்டியில், மேற்பார்வைக் குழுவின் (Oversight Committee) தலைவர் ஆன வீரப்ப மொய்லி, பின் வருமாறு கூறியுள்ளார்.

1. இவ்விஷயத்தில் உயர்கல்வி நிறுவனங்களை மிரட்டிப் பணிய வைக்கும் (Bulldozing) பேச்சுக்கே இடமில்லை !

2. நிறுவன வாரியாக நான் பேச்சு வார்த்தை நடத்திய பின்னரே, இடஒதுக்கீட்டை எவ்வாறு செயல்படுத்துவது (அதாவது, ஒரு கட்டத்திலா, பல கட்டங்களிலா) என்ற முடிவு எடுக்கப்படும்.

3. கல்வி நிறுவனங்கள் மேற்பார்வைக் குழுவின் ஆலோசனைகளை பரிசீலித்து, அவைகளின் தற்போதைய நிலைமையை கருத்தில் கொண்டு, இடஒதுக்கீட்டை அமுல்படுத்துவது குறித்து, கல்வி நிறுவனங்களே ஒரு நல்ல முடிவெடுக்க வாய்ப்பு தரப்படும் என்ற சாத்தியம் உள்ளது.

4. இடஒதுக்கீட்டை அமுல்படுத்துவது பற்றி ஆராய்ந்த ஐந்து துணைக் குழுக்களுமே (Sub-groups) இடஒதுக்கீட்டை ஒரே கட்டத்தில் (one phase) நடைமுறைக்கு கொண்டு வருவது இயலாத காரியம் என்று கூறியிருக்கின்றன.

5. உயர்கல்வி நிறுவனங்களுடனும், கல்வி வல்லுனர்களுடனும் விரிவாக பேச்சுவார்த்தை நடத்தி, அவர்களின் எண்ணங்களை கேட்டறிந்த பின்னர், எனது தலைமையிலான மேற்பார்வைக் குழு இறுதி முடிவெடுக்கும்.

6. ஆகஸ்டு 31-ஆம் தேதி, மேற்பார்வைக் குழு தனது அறிக்கையை அரசுக்கு சமர்ப்பிக்கும்.

7. உயர்கல்வி நிறுவனங்களின் தரம் (Excellence) பாதிக்காத வகையில், இடஒதுக்கீட்டை செயல்படுத்துவது தான், முக்கியக் குறிக்கோளாகக் (Main Theme) கொள்ளப் பட்டுள்ளது !

திரு.வீரப்ப மொய்லி கூறுவதை வைத்துப் பார்க்கும்போது, "எடுத்தோம், கவுத்தோம்!" என்றில்லாமல், பிற்படுத்தப்பட்டவரில் உண்மையான தேவையிருப்போர் முழுப்பலன் பெறும் வகையில், ஓட்டுக்களுக்காக என்றில்லாமல், யதார்த்தத்தை கருத்தில் கொண்டு, விருப்பு வெறுப்பின்றி, நேர்மையான முறையில் இடஒதுக்கீடு செயல்படுத்தப்படும் என்ற நம்பிக்கை ஏற்படுகிறது. பார்க்கலாம் !

என்றென்றும் அன்புடன்
பாலா

Thursday, August 10, 2006

பெரியார் பட சர்ச்சை - II

*********************
பெரியார் திரைப்பட சர்ச்சை - I
********************

தற்போது, மற்றொரு சர்ச்சை கிளம்பியிருக்கிறது. முதலில், எஸ்.வி.சேகர், பெரியார் திரைப்படத்திற்கு அரசு மானியம் வழங்கியது போல, மூதறிஞர் ராஜாஜி பற்றி படம் எடுக்க முன் வந்தால், அரசு மானியம் கிடைக்குமா என்று கேட்டதும், அதைத் தொடர்ந்து, பெரியார் படம் எடுப்பதை சேகர் எதிர்ப்பதாக ஊடகங்களில் செய்தி பரப்பப்பட்டது. அவர் கூறியது, பெரியார் படத்தை அரசே தயாரித்தால், செலவு குறைவாக இருக்கும் என்பது தான். இப்போது டிராபிக் ராமசாமி என்பவர், அரசு ஒரு தனி நபருக்கு (ஞானசேகரன்) 95 லட்சம் வழங்கியதை எதிர்த்து பொதுநல வழக்கொன்றை தொடுத்துள்ளார். பெரியார் பக்தகோடிகள் அவரை நீதிமன்றத்திற்கு வெளியே தாக்கியதாக நேற்று செய்தி வந்தது.

அரசு இந்த சர்ச்சையை தவிர்த்திருக்கலாம் ! அதாவது, பெரியாரின் கொள்கைகளில் மிகுந்த நம்பிக்கை வைத்திருப்பதாகக் கூறிக் கொள்ளும் திராவிடக் கட்சிகள் (திமுக, அதிமுக, தி.க, பா.ம.க ...), கட்சி சார்பாக பெரியார் படம் எடுக்க பண உதவி செய்திருக்கலாம் ! திமுகவும், அதிமுகவும் பணபலம் உள்ள கட்சிகள் என்பது அனைவருக்கும் தெரிந்ததே ! திமுக, சட்டமன்றத்திலேயே, தாங்கள் பெரியார் படத்திற்கு கட்சி சார்பில் பணவுதவி செய்யப் போவதாக அறிவித்திருந்தால், மற்ற
திராவிட வழி வந்த கட்சிகளும் (அதிமுக உட்பட) பெரியார் படமெடுக்க ஏதாவது உதவி செய்ய வேண்டிய சூழலுக்கு தள்ளப்பட்டிருக்கும் என்பது என் கருத்து. கட்சித் தலைவர்களையும், அவர்களின் எண்ணப்போக்கையும் மக்கள் புரிந்து கொள்ள இது ஒரு வாய்ப்பாக அமைந்திருக்கும் அல்லவா ?

மேலும், பெரியார் கொள்கைகளை தங்கள் உயிர் மூச்சாகக் கொண்டிருக்கும் திராவிட கழகம், இப்படத்திற்கு பெரிய அளவில் நிதியுதவி செய்யும் நிலையில் தான் உள்ளது என்பது உண்மை தானே ! கழகக் கண்மணிகள் நிதி வசூலும் செய்யலாமே !

இது ஒரு புறமிருக்க, தமிழ்த் திரைப்படப் பெயர்கள் தமிழில்(!) இருந்தால், அப்படங்களுக்கு சலுகைகள் அளிக்கப்படும் என்று அரசு அறிவித்திருப்பது, நல்லதொரு கேலிக்கூத்து ! பொதுவாக அரசு வழங்கும் மானியம் மற்றும் சலுகைகளுக்கான முழுப்பலன் திரைப்படத்துறையில் இருக்கும் கடை நிலை தொழிலாளர்களை சென்றடைவதில்லை. கோடிகளில் புரளும் தயாரிப்பாளர்களும், நடிகர்களும் மேலும் இதனால் லாபம் அடைகிறார்கள் ! சலுகைகள் என்பவை நல்ல திரைப்படங்களுக்கு மட்டுமே வழங்கப்பட வேண்டும். இஷ்டத்திற்கு சலுகைகள் அளித்து அரசு தன் நியாயமான வருமானத்தை இழப்பது எந்த வகையிலும் நியாயமில்லை.

அடுத்து, பெரியார் திரைப்படத்தில் வள்ளியம்மையாக நடிக்க ஜோதிர்மயி என்ற புதுமுக நடிகை தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார். ரேவதி, கௌதமி போன்ற தேர்ந்த நடிகைகளை (மற்றும் நடிகர்களை) நடிக்க வைத்தால், படத்தின் வெற்றி வாய்ப்பு இன்னும் பிரகாசமாக அமையும் என்று நினைக்கிறேன். சத்யராஜ் மட்டுமே படத்திற்கு வெற்றி தேடித் தர இயலாது !

என்றென்றும் அன்புடன்
பாலா

Saturday, July 15, 2006

சூடு தணிச்சு யோசிங்க, சிரிங்க !

முகமூடியின் இந்தப் பதிவை வாசித்து, Calgary சிவாவின் வேண்டுகோளுக்கு செவி மடுத்ததின் விளைவாக, விளைந்தது இந்த தமிழாக்கப் பதிவு ! ஆங்கில மூலத்திற்கு முகமூடியின் பதிவைப் பார்க்கவும் ! இப்படி லிங்க் தருவதன் மூலம் முகமூடிக்கும் நிறைய வாசகர்கள் கிடைப்பார்கள் இல்லையா ;-)


1. மெளனத்தை மேம்படுத்த வழியின்றிப் பேசாதே !

2. தவளைகள் தங்களை "BUG" செய்பவற்றை, எளிமையாகத் தின்று விடுகின்றன !

3. முட்டாள்தனம் ஒரு குறையல்ல ! வேறெங்காவது செல் !

4. சில நேரங்களில் நீ பூச்சி, சில நேரங்களில் நீ காற்றுத் தடுப்பான் (Windshield) !!!

5. உனக்கு உதவி செய்ய விருப்பம். எப்படி நீ உள்ளே நுழைந்தாய் ???

6. உன்னிடம் ஒன்று இருப்பதினாலேயே, அந்த ஒன்று இருப்பது போல் நீ நடந்து கொள்ளத் தேவையில்லை !

7. நான் "எவரும் இல்லை", அப்பழுக்கற்றவர் "எவரும் இல்லை", எனவே நான் அப்பழுக்கற்றவன் ! என்ன ஏதாவது புரியுதா :)

8. பாக்டீரியாவுக்கு ஆதரவு அளியுங்கள், சில மனிதர்கள் அதன் "Culture" க்கு மட்டுமே தகுதியானவர்கள் !

9. "எண்ணம்" என்று வரும்போது, சிலர் எங்கேயும், எதிலும் நிறுத்துவதில்லை !

10. அறிவுஜீவி: நீங்கள் மதிப்பு தராத பலப் பல விஷயங்கள் குறித்து அறிந்து வைத்திருப்பவர்

11. "இல்லை" என்பதன் எந்தப் பகுதி உனக்கு விளங்கவில்லை ?

12. பன்றியுடன் மல்லுக் கட்டாதே ! நீங்கள் இருவருமே அசுத்தப்படுவீர்கள், ஆனால் பன்றிக்கு அதில் கொண்டாட்டமே :)

13. ஓரணியாக செயல்படுவது மிக அவசியம் -- இன்னொருவர் மேல் பழி போட அது அனுமதிப்பதால் !

14. சரியாக இலக்கை நோக்கிச் சுட வேண்டுமெனில், முதலில் சுடு, பின்னர் சுட்ட இடத்தை இலக்கு என்று கூறு !

15. நான் ஒரு நாளைக்கு ஒருவரை மட்டுமே மகிழ்விப்பேன். ஆனால், இன்று உன் நாளில்லை, நாளையும் தோதாகத் தோன்றவில்லை !!!

16. எலிப் பந்தயத்தில் (Rat-Race) பிரச்சினை என்னவென்றால், அதில் நீ வென்றாலும், நீ எலியாகவே கருதப்படுவாய் !

நன்றி: நண்பர் முகமூடி அவர்கள் !

என்றென்றும் அன்புடன்
பாலா

Friday, July 14, 2006

படிச்சுட்டு முடிஞ்சா சிரிங்க --- 8-வது பதிவு

1. வாழ்க்கை எனும் ஓடம், வழங்குகின்ற பாடம் !

நடு இரவில் கண் விழித்த ஒரு பெண்மணி தன் கணவர் அருகில் இல்லாதது கண்டு அவரை வீட்டில் தேடியபோது, கணவர் சமையலறையில் காபி அருந்திக் கொண்டிருப்பதை பார்த்தார். கணவர் சுவற்றை வெறித்தபடி ஆழ்ந்த சிந்தனையில் இருப்பது போல் தோன்றினார். அவர் கண்ணிலிருந்து வழிந்த கண்ணீரை துடைத்துக் கொண்டார். துணுக்குற்ற மனைவி, "என்ன ஆச்சு, டார்லிங் ? இந்நேரத்தில் இங்கு என்ன செய்து கொண்டிருக்கிறீர்கள் ?" என்று வினவினார். கணவர், மனைவியை நிமிர்ந்து பார்த்து, "20 வருடங்களுக்கு முன் நாமிருவரும் காதல் வயப்பட்டது உனக்கு ஞாபகம் இருக்கிறதா ? அப்போது உனக்கு 16 வயது தான் !". மனைவி, "நன்றாக நினைவிருக்கிறது" என்றார்.

இருவருக்குமிடையே சிறிய மௌனம் நிலவியது ! கணவரின் குரலில் ஏற்பட்ட தடுமாற்றத்தால், வார்த்தைகள் மெல்ல மெல்ல வெளிவந்தன, "உன்னுடைய அப்பாவிடம் நாம் ஓர் இக்கட்டான சூழ்நிலையில் (மனைவியின் முகத்தில் இப்போது வெட்கம்!) மாட்டிக் கொண்டதும், முன்கோபியான அவர், நான் உடனே உன்னை திருமணம் செய்யாவிடில் என்னை 20 வருடங்கள் சிறையில் அடைக்க சட்டத்தில் வழி இருக்கிறது என்று துப்பாக்கி காட்டி மிரட்டியதும் உனக்கு நினைவிருக்கிறதா ?" என்று கேட்டதும், மனைவி மிக மென்மையாக, "ஆமாம், செல்லம், ஞாபகம் வருகிறது" என்று பதிலுரைத்தார். கணவர் கண்களை துடைத்துக் கொண்டே, "இன்று நான் விடுதலை அடைந்திருப்பேன் !!!" என்று மிக்க கழிவிரக்கத்துடன் கூறினார் :)

2. வால மீனுக்கும், விலாங்கு மீனுக்கும் !

ஒரு கணவர் அலுவலகத்திலிருந்து தனது மனைவியை தொலைபேசியில் அழைத்து, "டார்லிங், நான் எனது மேலாளருடனும், அவருடைய நண்பர்களுடனும், கனடாவிற்கு ஒரு வார காலம் மீன் பிடி சுற்றுலா செல்ல வேண்டியுள்ளது ! நான் எதிர்பார்க்கும் பணி உயர்வைப் பெற இது ஒரு நல்ல வாய்ப்பாக நிச்சயம் அமையும் ! பயணத்துக்குத் தேவையான துணிமணிகளையும், மீன்பிடி உபகரணப் பெட்டியையும் தயாராக எடுத்து வை. அலுவலகத்திலிருந்தே கிளம்ப வேண்டியிருப்பதால், செல்லும் வழியில், அவற்றை எடுத்துக் கொள்கிறேன். ஓ, ஒன்றை மறந்து விட்டேன். எனது நீல நிற பைஜாமாவை மறக்காமல் எடுத்து வை" என்று கூறினார்.

மனைவியும் பரபரப்பாக செயல்பட்டு, கணவரின் பயணத்திற்குத் தேவையான அனைத்தையும் பேக் செய்து அவரை ஊருக்கு அனுப்பி வைத்தார். ஒரு வாரம் கழித்து திரும்பிய கணவர், சற்று அயற்சியாகத் தெரிந்தாலும், உற்சாகமாகவே காணப்பட்டார். "என்ன, நிறைய மீன் பிடித்தீர்களா ?" என்று கேட்ட மனைவியிடம், கணவர், "ஆமாம், நிறையவே, வால மீன், விலாங்கு மீன், வஜ்ரம், விரால் -னுட்டு நிறையவே ! ஆனால், ஏன் நீ நான் கேட்ட நீல நிற பைஜாமாவை எடுத்து வைக்கல ? மறந்துட்டியா ?" என்றார். உடனே மனைவி, "இல்லையே, எடுத்து வைத்தேனே, உங்களுடைய மீன்பிடி உபகரணப் பெட்டியில் வைத்திருந்தேன் !!!" என்றவுடன், கணவர் எஸ்கேப் :)

என்றென்றும் அன்புடன்
பாலா

Tuesday, July 11, 2006

மும்பையில் மறுபடியும் ஒரு பயங்கரம் !

இன்று மாலை 6 - 6.30 PM, அதாவது 30 நிமிட நேரத்தில் மும்பையில் 7 குண்டு வெடிப்புகள் நடந்துள்ளன. இந்த தொடர் குண்டு வெடிப்பு மும்பையின் மேற்கு ரயில் (western railway) பாதையில் அமைந்துள்ள சந்திப்புகளில் நடந்துள்ளது. மாதுங்கா, மாஹிம், சாந்தாகுரூஸ், கார், ஜோகேஷ்வரி, பயந்தர், போரிவிலி ஆகிய இடங்களில் நடந்த இந்த கோர சம்பவத்தில் 40-50 பேர் உயிரிழந்துள்ளனர். எண்ணிக்கை அதிகரிக்கலாம் ! பலர் காயமடைந்துள்ளனர். NDTV-இல் பார்த்த சில காட்சிகள் அதிர்ச்சியை ஏற்படுத்தின.

தில்லியிலிருந்து கிடைத்ததாகக் கூறப்படும் இன்டெலிஜன்ஸ் தகவல்கள், Lashkar-e-Toiba தீவிரவாதிகளே (தாவூதின் துணையோடு) இந்த படு பாதகச் செயலை நிறைவேற்றியதாக தெரிவிக்கின்றன. இந்த கொலைகாரர்கள் கிட்டத்தட்ட 8 மாதங்கள் மும்பையிலேயே தங்கி, திட்டமிட்டு இதைச் செய்ததாகக் கூறப்படுகிறது. தீவிரவாதிகள் இதற்குத் தேவையான, பெரிய அளவிலான வெடி மருந்து பொருட்களை எவ்வாறு கடத்தி மும்பைக்கு எடுத்து வந்தார்கள் என்பது ஒரு பெரிய கேள்வி ! இறந்தவர்களின் ஆத்மா சாந்தியடைய பிரார்த்திப்பதைத் தவிர தற்போது வேறென்ன நாம் செய்ய இயலும் ? இந்த பயங்கரத்தைச் செய்த தீவிரவாத ஈனப்பிறவிகளை (இவர்களை மிருகங்களுடன் ஒப்பிடுவது, அவற்றுக்கு கேவலம்!) என்ன செய்தால் தகும் ?

என்றென்றும் அன்புடன்
பாலா

Sunday, July 09, 2006

திரு.வேணுகோபாலை ஏன் பிடிக்கும் ?

இதற்கு பல காரணங்கள் உள்ளன.

1. திரு.வேணுகோபால், உதவி என்று தன்னை நாடி வந்தவர்களுக்கு அயராமல் முடிந்தவரை வேண்டியதை செய்து, அவர்களின் குறைகளை போக்கியிருக்கிறார். இனிமேலும், அவ்வாறே செய்வார் என்பது என் நம்பிக்கை .

2. திரு.வேணுகோபால் ஒரு நல்ல இசைக்கலைஞர் என்பது பலருக்கு தெரியாது. தன் இசையால் பலரையும் தன் வயப்படுத்துபவர் என்று அவர் நண்பர்கள் கூறுகிறார்கள்.

3. தன்னை நம்பி வந்த ஒரு பெண்மணிக்கு, ஒரு முறை மிகப்பெரிய உதவியை செய்தவர் திரு.வேணுகோபால். அத்தகைய உதவியை நானறிந்து யாரும் செய்ததில்லை !

4. அவருடைய சாதுர்யமும் (கொஞ்சம் சாணக்கியத்தனமும்) அவரைச் சேர்ந்தவர்களுக்கு ஒரு பெரும்போராட்டத்தில் குறிப்பிடத்தக்க வெற்றிகளை தந்திருக்கிறது என்றால் அது மிகையாகாது.

5. தன் சிறு வயதில், சிறந்த அறிவுள்ளவராகவும், தைரியசாலியாகவும் திகழ்ந்தார். ஆனால், அவரது அன்னை, வேணுகோபால் சின்னச் சின்ன திருட்டுக்கள் செய்திருப்பதாகக் கூறுகிறார். சிறுவயதில் குறும்புகள் சகஜம் தானே !

6. தன்னை நாடி வந்த புத்திசாலி மாணவன் ஒருவன், திரு.வேணுகோபாலின் செறிவு மிக்க வார்த்தைகளை கேட்டு, வாழ்வில் வெற்றியடைந்து, சிகரத்தைத் தொட்டதை மறக்க முடியுமா என்ன ?

7. திரு.வேணுகோபால் நட்புக்கு மிகுந்த முக்கியத்துவம் கொடுப்பவர். தனது நண்பர் ஒருவருக்கு அவர் கேட்காமலேயே வேண்டிய உதவியை செய்து, நண்பரின் மனம் குளிர வைத்தவர்.

8. ஏன், பல அயல் நாட்டவர் கூட அவர் பால் ஈர்க்கப்பட்டு, திரு.வேணுகோபாலை தங்கள் தலைவராகவே ஏற்றுக் கொண்டுள்ளனர்.

இத்தகைய நல்ல உள்ளமும் குணங்களும் கொண்ட திரு.வேணுகோபாலை, நானும் இன்னும் பலரும் விரும்புவதில் என்ன பெரிய ஆச்சரியம் இருக்க முடியும் ?? அவரிடம் பிடிக்காத ஒன்று என்று கூற வேண்டுமானால், சிறு வயதில் அவர் இளம்பெண்களை சற்று அதிகமாக நையாண்டி செய்திருப்பதை சுட்டிக் காட்டலாம் ! மற்றபடி, திரு.வேணுகோபால் ஓர் அசாதாரண பெர்சனாலிடி என்பதில் எனக்கு சந்தேகமில்லை.
*******************************





விஷ்ணுவின் அம்சமான, குழலூதும் கண்ணபிரானாகிய பகவான் வேணுகோபாலனை வெறுப்பவர் யாருமிலர் :)

பின் குறிப்பு: பதிவை மறுபடியும் வாசிக்கவும். மேலே குறிப்பிடப்பட்டுள்ள 8 பாயிண்ட்களின் விவரம் கீழே:

1. வேணுகோபால சுவாமி உலக ரக்ஷகர் !

2. புல்லாங்குழல் வாசிப்பவர் !

3. திரௌபதிக்கு அபயமளித்தவர் !

4. குருஷேத்திர யுத்த வெற்றிகளுக்கு உதவியவர் !

5. காளிங்கனை அடக்கியவர், வெண்ணெய் திருடியவர் !

6. பார்த்தனுக்கு கீதோபதேசம் செய்தவர் !

7. ஏழை சுதாமாவுக்கு உதவியவர் !

8. ஹரே ராமா ஹரே கிருஷ்ணா இயக்க நாயகர் !

என்ன, நான் சொன்னதெல்லாம் சரி தானே, அடிக்க வர மாட்டீர்கள் என்ற சின்ன நம்பிக்கையில் தான், இப்படி ... ;-)

ஆக்கத்திற்கு ஊக்கம் : நண்பர் 'தமிழினி' முத்து அவர்கள் !!!

என்றென்றும் அன்புடன்
பாலா

Friday, July 07, 2006

வேணுகோபால் என்ற மருத்துவர்

தன்னை பணியிலிருந்து நீக்கியதும், அதை சிறுமைப்படுத்தும் விதத்தில் செய்ததும் தன்னை மிகவும் காயப்படுத்தி விட்டதாக (It is a lasting feeling of pain that hurts terribly!) Dr.வேணுகோபால் கூறியுள்ளார். அவர் பக்கத்து விளக்கத்தை எடுத்துக் கூற அவருக்கு வாய்ப்பளிக்காமல், அவரை பணி நீக்கம் செய்தது சரியான அணுகுமுறை இல்லை. அவரை நீக்குவது பற்றி கூட்டத்தில் விவாதிக்கப்பட்டபோது, அவரை அறைக்கு வெளியே காத்திருக்க வைத்தது அதை விடக் கொடுமை ! அமைச்சர், வேணுகோபாலுடன் AIIMS-இல் நிலவும் பிரச்சினைகள் குறித்து விரிவாகப் பேசி, ஒரு சுமுகமான தீர்வுக்கு வழி வகுத்திருக்கலாம் தான் ! ஆனால், நம்மூர் அரசியல்வாதிகள் கிட்டத்தட்ட குறுநில மன்னர்கள் போல் தானே செயல்படுகிறார்கள் :-( அமைச்சர் தான் AIIMS-இன் தலைவர் என்பது உண்மை தான். ஆனால், அதை குடியரசுத் தலைவர் பதவி போல Advisory பதிவியாகத் தான் பார்க்க வேண்டும். முக்கியமாக, AIIMS போன்ற Autonomous கழகங்களில் அரசியல் தலையீடு இல்லாமல் இருப்பது மிக அவசியமாகிறது. இத்தனை ஆண்டுகள் அவ்வாறு இருந்தது தான், AIIMS-இன் வளர்ச்சிக்கும் அதன் உலகளாவிய மதிப்புக்கும் காரணம் !

இப்போது Dr.வேணுகோபாலைப் பற்றி:

Dr.வேணுகோபால் உலகப் பிரசித்தி பெற்ற ஒர் இதய அறுவை சிகிச்சை நிபுணர். AIIMS-இல் 40 ஆண்டுகள் அவர் பணி புரிந்து பல நல்ல திட்டங்களை வகுத்து அவற்றில் வெற்றியும் பெற்றுள்ளார். சமீபத்தில் நடந்த வேலை நிறுத்தம் தான் அவர் பணி வாழ்வில் ஒரு கரும்புள்ளி என்று கூறலாம். இதுவே சில அரசியல்வாதிகளை (முக்கியமாக அமைச்சரை) அவருக்கு எதிராக திருப்பி, அவர் மேல் காழ்ப்புணர்ச்சி ஏற்பட காரணமாய் அமைந்து விட்டது. அரசியல் சூழ்ச்சி விளையாட்டு குறித்து அவரின் அறியாமையே அவரை இந்த நிலைக்கு கொண்டு வந்து விட்டது ! கொஞ்சம் அரசியல் அறிவு / சூட்சமம் தெரிந்தவராக இருந்திருந்தால், அமைச்சருடன் சமரசம் செய்து கொண்டு போயிருப்பார் அல்லவா ? அவருக்கு ஆதரவாக வேலை நிறுத்தம் மேற்கொண்டுள்ள மருத்துவர்களின் மேல் "ESMA" பாயலாம் என்று யாரோ அவரிடம் கூறியபோது, திரு.வேணுகோபால் "ESMA"வை ஆஸ்த்மா என்று புரிந்து கொண்டார் என்றால் பாருங்களேன் !

1996-இல் AIIMS டைரக்டராக அவரை நியமனம் செய்தபோது, அப்பதவியை முதலில் அவர் மறுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது ! தனது 18 வயதிலிருந்து, 46 வருடங்கள் AIIMS-இல் தொடர்ந்து சேவை செய்த ஒரு புகழ் பெற்ற மருத்துவரை நேற்று முளைத்த காளான்கள் மோசமான முறையில் தூக்கி எறிந்திருப்பது வருந்தத்தக்கதே. படித்த காலத்தில், பிரதமர் நேருவிடமிருந்து, சிறந்த மாணவருக்கான தங்கப் பதக்கம் வாங்கியவர் திரு.வேணுகோபால். மருத்துவப் பட்ட மேற்படிப்பிலும் தங்கப் பதக்கம் வாங்கியவர். பெருமை வாய்ந்த இதய அறுவை சிகிச்சை நிபுணர் டென்டன் கூலியிடம் (Denton Cooley) பயிற்சி பெற்றவர். அதைத் தொடர்ந்து, 1974-இல் AIIMS-இல் இதய அறுவை சிகிச்சைத் (open heart surgery) துறையை நிறுவி, நூற்றுக்கணக்கான மருத்துவர்களை பயிற்றுவித்திருக்கிறார். கடந்த 30 ஆண்டுகளில் கிட்டத்தட்ட 62000 இதய அறுவை சிகிச்சைகள் செய்துள்ளவர் திரு. வேணுகோபால் ! இந்தியாவின் முதல் இதய மாற்று அறுவை சிகிச்சை செய்தவர் என்ற பெருமைக்கும் உரியவர் திரு.வேணுகோபால் ! 1998-இல் அவரது அயராத மருத்துவ சேவைக்காக பத்மபூஷன் விருது பெற்றவர் திரு.வேணுகோபால்.

என்றென்றும் அன்புடன்
பாலா

Wednesday, July 05, 2006

அப்பாடா, ஜெர்மனி தோற்றது !

நான் மிக மிக எதிர்பார்த்தது போலவே நேற்று இரவு நடைபெற்ற கால் பந்தாட்டத்தில் ஜெர்மனி இத்தாலியிடம் தோற்றுப் போனது ! அதே போல, தொடக்கத்திலிருந்தே முக்கி முக்கி ஆடிய பிரேசில் பிரான்ஸிடம் தோற்றதும் ஓரளவு எதிர்பார்த்தது தான் ! கால் இறுதியில் நடந்த மாதிரி, ஆட்டத்தை எப்பாடு பட்டாவது Penalty shoot out-க்கு இட்டுச் சென்று, அர்ஜெண்டினாவை வீழ்த்தியது போல இத்தாலியையும் வீழ்த்தி விடலாம் என்ற ஜெர்மானிய எண்ணத்தில் மண் !

மிகச்சிறப்பாக ஆடிய இத்தாலி அணி, எக்ஸ்ட்ரா வேளியின் கடைசி மூன்று நிமிடங்களில் இரண்டு அருமையான கோல்கள் போட்டு இறுதிச் சுற்றுக்கு முன்னேறியது. பிரான்ஸ¤ம் இன்று போர்ச்சுகலை வென்று, இத்தாலியுடன் இறுதி ஆட்டத்தில் மோதினால், ஒரு மின்சாரப் பாய்ச்சி (ELECTRIFYING ;-)) ஆட்டத்தை நிச்சயம் எதிர்பார்க்கலாம். இத்தாலியோ, பிரான்ஸோ யார் கோப்பையை வென்றாலும் மகிழ்ச்சியே !!!

ஜெர்மனி ஓரளவு திறமையாக ஆடினாலும், அவ்வணியின் ஆட்டம் பார்ப்பதற்கு ரசிக்கத் தக்கதாக இருப்பதில்லை. ஒரு "Set Pattern" வகை ஆட்டத்தையே தொடர்ந்து விளையாடியும், துளியும் கற்பனை இல்லா (Unimaginative) ஆட்ட யுக்தியை கடைபிடித்தும் வந்ததே, ஜெர்மன் தோல்விக்கு ஒரு முக்கியக் காரணம் என்பது என் கருத்து.உலக கால்பந்து போட்டிகளில் இத்தாலி ஜெர்மனியிடம் ஒரு முறை கூட தோற்றது கிடையாது என்பது குறிப்பிடத்தக்கது.

நேற்று ஜெர்மனி ஓரளவு (மற்ற ஆட்டங்களை விடவும்) நன்றாகவே விளையாடியது. பெர்ட் ஸ்னைடர் இரு முறை, கோல் போடும் எளிமையான வாய்ப்புகளை நழுவ விட்டார் ! எக்ஸ்ட்ரா வேளியின் 27-வது நிமிடத்தில் கென்னாரோ கடூஸோ பிரமிக்கத்தக்க வகையில், கடினமான ஒரு கோணத்திலிருந்து, பந்தை இடது காலால் உதைக்க, சுழன்று சென்ற பந்து கோல் கம்பத்துக்கு வெளியே செல்வது போல் ஒரு பாவ்லா காட்டி விட்டு, கோல் போஸ்ட்டுக்கு உள்ளே இடது புற மேல் மூலையில் தஞ்சமடைந்ததும், ஜெர்மானியப் பார்வையாளர்களிடையே பேச்சு மூச்சில்லா ஒரு மயான அமைதி குடி புகுந்தது (ரொம்பப் பெரிய வாக்கியமோ :))

இத்தாலியர்களோ களிப்பின் உச்சத்தில் மிதந்தனர் ! ஆட்டத்தின் இறுதி நிமிடத்தில், ஒரு திறமையான PASS வாயிலாக வந்த பந்தை, டெல் பியரோ கோலடித்து "Execution of Germany"யை துல்லியமாக நிறைவு செய்தார் !!!

என்றென்றும் அன்புடன்
பாலா

Saturday, July 01, 2006

டோண்டு, ஜீவாவின் 'ஆறுக்கான' அழைப்பு !

தலைப்பில் குறிப்பிட்டுள்ள வலைப்பதிவர்களின் அன்பான அழைப்பை ஏற்று, இப்பதிவு ! கொஞ்சம் வித்தியாசமாக ஒன்றிலிருந்து ஒன்பது வரை, பிடித்த சில விஷயங்களை பகிர்ந்து கொள்கிறேன் !

ஒன்று:
மருத்துவ மாணவி கௌசல்யாவுக்கு (வலைப்பதிவு நண்பர்களின் ஆதரவோடு) உதவி செய்ய முடிந்ததையே, வலைப்பதிவு ஆரம்பித்து, தமிழ்மணத்தில் என்னை இணைத்துக் கொண்டு எழுதியதன் விளைவாக ஏற்பட்ட மிகப் பெரிய பயனாக / மன நிறைவாகக் கருதுகிறேன்.

இரண்டு:
வலை பதிய முதல் ஊக்கம் தந்த இருவர் தேசிகன் மற்றும் காசி
(நண்பர்கள் சிங்கை அன்பு, சந்திரவதனா, யளனகபக கண்ணன் ஆகியோரையும் இங்கே குறிப்பிட விரும்புகிறேன் !)

மூன்று:
என்னை வலை நண்பர்களிடையே சற்று பிரபலம் ஆக்கிய விஷயங்களாக நினைப்பது
1. பல்லவியும் சரணமும் பதிவுகள் (மொத்தம் 32 !)
2. சிறுவயது சிந்தனைகள் பதிவுகள் (மொத்தம் 8)
3. GCT கல்லூரி வாழ்க்கை பற்றிய பதிவுகள் (மொத்தம் 5)


(உஷாவின் உத்தரவுப்படி (மன்னிக்கவும்! வேண்டுகோளுக்கு இணங்க ) வாசகர் விருப்பமாக புதியவர்கள் படிப்பதற்காக, மன்னனின் கௌரவம் சதுரங்க நடுவிலே! சேர்க்கப்பட்டுள்ளது !

நான்கு:
படித்ததில் பிடித்தவை
1. சுஜாதாவின் எழுத்துக்கள்
2. கலீல் கிப்ரான் கவிதைகள்
3. ஜெ·ப்ரி ஆர்ச்சர் - எல்லா நாவல்களும்
4. பக்தி ரஸம் சொட்டும் ஆழ்வார் பாசுரங்கள்


ஐந்து:
"Controversy" பதிவர்கள் - THY Names are
1. முகமூடி
2. குழலி
3. டோண்டு ராகவன்
4. தமிழினி முத்து
5. மாயவரத்தான்

(இருந்தாலும் இவர்களின் பதிவுகள் ரசிக்கத் தக்கவை !)

ஆறு:
பல முறை அனுபவித்துப் பார்த்த தமிழ் திரைப்படங்கள்
1. காதலிக்க நேரமில்லை'
2. ஊட்டி வரை உறவு
3. தில்லுமுல்லு
4. அந்த ஏழு நாட்கள்
5. முள்ளும் மலரும்
6. அன்பே சிவம்

ஏழு:
பிடித்த வலைப்பதிவர்கள் (Not in any particular order :) )
1. தேசிகன்
2. ஐகாரஸ் பிரகாஷ்
3. ரஜினி ராம்கி
4. பெனாத்தல்கள் சுரேஷ்
5. ரோசா வசந்த்
6. யளனகபக கண்ணன்
7. மாண்ட்ரீசர் (முழுசா எதுவும் புரியாவிட்டாலும் கூட ;) )

(அருண் வைத்தியநாதனையும், PK சிவகுமாரையும் இங்கே குறிப்பிட விரும்புகிறேன் !)

எட்டு:
பிடித்த எட்டு தமிழ்ப் பாடல்கள்
1. குறையொன்றும் இல்லை மறைமூர்த்தி கண்ணா
2. மாலைப்பொழுதின் மயக்கத்திலே நான் கனவு கண்டேன் தோழி
3. சங்கீத ஜாதி முல்லை காணவில்லை
4. மலரே குறிஞ்சி மலரே
5. பூஜைக்கு வந்த மலரே வா, பூமிக்கு வந்த நிலவே வா
6. தென்றல் வந்து தீண்டும்போது என்ன வண்ணமோ மனசிலே
7. காற்றில் எந்தன் கீதம் காணாத ஒன்றைத் தேடுதே
8. காதல் சிறகை காற்றினில் விரித்து வானவீதியில் பறக்கவா


ஒன்பது:
பார்க்க விரும்பும் இடங்கள்
1. ஹவாயி தீவுகள்
2. வெஸ்ட் இண்டீஸ் (2007 கிரிக்கெட் உலகக் கோப்பைக்கு போகலாம்னு மனசுலே ஒரு எண்ணம் இருக்கு, பார்க்கலாம்!)
3. நயாகரா (இது நீருக்கு வீழ்ச்சியல்லவே, எழுச்சி அல்லவா என்ற வைரமுத்துவின் வரிகள் நினைவுக்கு வருகிறது !)
4. மொரீஷியஸ்
5. நியுசிலாந்து
6. மசை மாரா (ஆப்பிரிகா)
7. குலு மணாலி
8. டார்ஜிலிங்க்
9. வைணவ திவ்ய தேசங்கள் (106-இல் எவ்வளவு இயலுமோ !)


என்றென்றும் அன்புடன்
பாலா

பல்லவியும் சரணமும் II - பதிவு 7

சில பழைய பாடல்களின் சரணங்கள் கீழே. பல்லவியையும், (முடிந்தால் திரைப்படத்தையும்) கண்டு பிடியுங்களேன்! விடைகள் நாளைய பதிவில், !!! தேவையிருந்தால் மட்டுமே!

ஓருவர் பின்னூட்டமிடும்போது, 4 அல்லது 5 சரணங்களுக்கான பல்லவிகளை மட்டும் பதியவும், அவருக்கு எல்லாவற்றுக்கும் விடை தெரிந்திருந்தாலும் கூட :-))

ஏனெனில், மற்றவர்களும் சற்று முயன்று பார்க்கட்டுமே!

3 பின்னூட்டங்களுக்குப் பிறகு, there are no regulations, it becomes a FREE FOR ALL!


1. ஒரு தடவை தேன் கொடுத்து மடியில் விழுந்தேனா ...

2 அது காலங்கள் மாறினும் மாறாதது....

3. கதிர் போலே நான் கண்டேன் மன்னன் முகம் ...

4. சிட்டுக்கள் போல தொட்டுக் கொண்டாட நேரம் வரவில்லை ...

5. தோள் சேர்ந்திடும் கங்கை செவ்வாழையின் தங்கை ...

6. மடியேறி வாழும் பெண்மை படியேறி வந்ததின்று ...

7. அன்று சொன்ன வார்த்தை அலை போல ...

8. அவள் நிலை நீ உணர மாட்டாயோ...

9. தொட்ட கைகளால் நான் மலர்ந்தேன் ...

10. சின்னாளம்பட்டியிலே கண்டாங்கி எடுத்து ...

11. கண்ணீரிலே நான் தீட்டினேன் கன்னத்தின் கோலங்கள்...

12. மடி மீது விளையாடும் சேயாக ...

என் பழைய நினைவுகளிலிருந்து சுரண்டி எடுத்துப் பதித்ததால், சொற்தவறுகள் இருக்கலாம்! மன்னிக்கவும், திருத்தவும்!

என்றென்றும் அன்புடன்
பாலா

Wednesday, June 28, 2006

GCT யில் ஒரு VIP யுடன் சந்திப்பு !

சென்ற வாரம் GCT கல்லூரிக்கு, நான் பணி புரியும் நிறுவனத்திற்கு இளம் பொறியாளர்களை தேர்ந்தெடுக்கும் நிமித்தம் (Campus Recruitment) செல்ல நேர்ந்தது. எப்போதும் போலவே கல்லூரி வளாகத்திற்குள் காலடி எடுத்து வைப்பதே ஒரு சுகானுபவமாகத் தோன்றியது! சந்தித்த மாணவப் பிரதிநிதிகள், மிக அடக்கமாகவும், எழுத்து மற்றும் நேர்முகத் தேர்வுகளை நடத்த மிக உதவியாகவும் இருந்தார்கள். Girls College of Technology என்று சொல்லும் அளவுக்கு மாணவிகள் எண்ணிக்கை அதிகமாக இருந்தது !! நான் பயின்ற காலகட்டத்தில், பொறியியற் படிப்பில் தகவல் தொழில்நுட்பம், கணினிவியல் போன்ற கிளைகள் இல்லை. நான் பழைய மாணவன் என்றவுடன் கல்லூரியின் Placement coordinator (முனைவர் தண்டபாணி) நான் கல்லூரி முதல்வரை (முனைவர் திரு. பழனிச்சாமி) சந்திக்க ஏற்பாடு செய்து விட்டார்.

அதற்கு முன்பே, நான் சந்திக்க விரும்பிய VIP க்கு போன் செய்து, என்னை சந்திப்பதற்கு GCT வர இயலுமா என்று கேட்டதற்கு, 'இதோ புறப்பட்டு வருகிறேன், எங்கு காத்திருக்கிறீர்கள் ?' என்றார் !!! சொன்னபடி, அரைமணி நேரத்தில் அந்த VIP வந்து சேர்ந்தார். சிலரை முதல் முறை பார்த்தவுடன் பிடித்துப் போய் விடும். VIPயும் அந்த வகையைச் சேர்ந்தவர். இதில் ஆச்சிரியம் என்னவென்றால், கோயமுத்தூரைச் சேர்ந்த, முன்னாள் GCT மாணவரான அந்த VIP, கிட்டத்தட்ட 15 வருடங்களூக்குப் பிறகு அன்று தான் GCT வளாகத்தில் காலடி எடுத்து வைக்கிறார் !!! நான் மூன்று வருடங்களுக்கு முன் மேற்கொண்ட GCT பயணம் குறித்து முன்பு நண்பனுக்கொரு மடல் வரைந்திருக்கிறேன்!

VIPயை முதல்வருக்கு அறிமுகம் செய்து வைத்தேன். முதல்வருக்கு ஏற்கனவே, VIP குறித்து ஒரு முன்னுரை தந்திருந்தேன் !! என் வேண்டுகோளுக்கு இணங்க, VIP தான் செய்து வரும் தமிழ்ப்பணி பற்றி முதல்வருக்கு அழகாக ஒரு சிறு குறிப்பு வரைந்தார் ! பின்னர், முதல்வருக்கு விடை கொடுத்து விட்டு, VIPயும் நானும் காண்டீன் சென்று சற்று நேரம் அளவளாவிக் கொண்டிருந்தோம். VIP தான் சமீபத்தில் தொடங்கிய தொழில் மற்றும் வடிவமைத்து வரும் product குறித்தும் ஒரு சிறு விளக்கம் தந்தார். VIP மிகவும் interesting-ஆன மனிதர் என்பதை குறிப்பிட விரும்புகிறேன் (அவரும் என்னைப் போலவே ஒரு GCTian இல்லையா :)) !!! அவருடன் நிறைய பேச விரும்பியும், நேரமின்மை காரணமாக முடியவில்லை. VIPக்கு விடை கொடுத்து விட்டு GCTக்கு வந்த வேலையை பார்க்கத் திரும்பினேன்!

ஒரு மாணவரை நேர்முகத் தேர்வு செய்தபோது, அவரை பணிக்கு எடுக்கலாமா வேண்டாமா என்று ஒரு சிறு குழப்பம் எனக்கும் என்னுடன் வந்த மேலாளருக்கும் நிலவியது. நான் அந்த மாணவரிடம் அவர் பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத் தேர்வில் வாங்கிய மதிப்பெண்கள் என்னவென்று வினவினேன் . அவர் 1170/1200 என்றவுடன், அவரை உடனே தேர்ந்தெடுத்து விட்டேன் !!! அம்மாணவர் நிச்சயம் கடின உழைப்பாளியாக இருந்திருக்க வேண்டும். எங்கள் நிறுவனத்தில் சேர்ந்த பின், கடின உழைப்பு என்ற ஒன்றை வைத்து, தேவையான பிற தகுதிகளையும் அந்த மாணவர் தனதாக்கிக் கொள்வார் என்ற நம்பிக்கை என்னிடம் உள்ளது.

சரி, சரி ! VIP மேட்டருக்கு வருகிறேன் ! VIP வேறு யாருமில்லை, "தமிழ்மணம்" காசி தான் ! வலைப்பதிவுலகில் தற்போது நிலவி வரும் சச்சரவுகள்/சர்ச்சைகள் பற்றியும் கொஞ்சம் பேசினோம். அவற்றைப் பற்றி எழுதி எதையும் கிளறுவதாக இல்லை, மன்னிக்கவும் !!!

GCT நினைவுகள் பற்றி சமீபத்தில் எழுதியவை, உங்கள் பார்வைக்கு:
GCT தோழனுக்கு ஒரு கடிதம் --- Part 1
GCT தோழனுக்கு ஒரு கடிதம் --- Part 2
GCT தோழனுக்கு ஒரு கடிதம் --- Part 3
GCT தோழனுக்கு ஒரு கடிதம் --- Part 4

என்றென்றும் அன்புடன்
பாலா

Sunday, June 25, 2006

என் வலைப்பதிவு குறித்து "Blogthings" கூறியது !

முத்துவின் என்ன கொடுமை சார் இது? பார்த்து விட்டு Blogthings பக்கம் சென்று அங்கு கேட்ட கேள்விகளுக்கு விடையளித்த பின் கிடைத்த, என் வலைப்பதிவு பற்றிய விமர்சனம் கீழே !!! நிஜமாகவே, "கொடுமை" தான் ;-)

Your Blogging Type is Unique and Avant Garde

1. You're a bit ... unusual. And so is your blog.

2. You're impulsive, and you'll often post the first thing that pops in your head.

3.Completely uncensored, you blog tends to shock... even though that's not your intent.

4.You tend to change your blog often, experimenting with new designs and content.



முதல் கருத்து தவறு :(

இரண்டாவது கருத்து ஓரளவு சரி தான் !!!

மூன்றாவது கருத்து அநியாயமானது :((

நான்காவது கருத்து ஓரளவு சரி தான் !!!

நீங்கள் உங்கள் கருத்துக்களை சொல்லுங்களேன் :)

என்றென்றும் அன்புடன்
பாலா

Saturday, June 24, 2006

பல்லவியும் சரணமும் II - பதிவு 6

சில பழைய பாடல்களின் சரணங்கள் கீழே. பல்லவியையும், (முடிந்தால் திரைப்படத்தையும்) கண்டு பிடியுங்களேன்! விடைகள் நாளைய பதிவில், !!! தேவையிருந்தால் மட்டுமே!

ஓருவர் பின்னூட்டமிடும்போது, 4 அல்லது 5 சரணங்களுக்கான பல்லவிகளை மட்டும் பதியவும், அவருக்கு எல்லாவற்றுக்கும் விடை தெரிந்திருந்தாலும் கூட :-))

ஏனெனில், மற்றவர்களும் சற்று முயன்று பார்க்கட்டுமே!

3 பின்னூட்டங்களுக்குப் பிறகு, there are no regulations, it becomes a FREE FOR ALL!


1. பல இடத்தில் பிறந்த நதிகள் ஒரு கடலில் வந்து சேரும் ...

2 சித்திரம் பேசும் தத்துவம் ஒன்று, எழுதியவன் எங்கே....

3. கூடியபிறகு குற்றம் காணும் கொள்கையைத் தள்ளுங்கள் ...

4. உன்னை நெஞ்சென்ற மஞ்சத்தில் சந்தித்தேன் ...

5. சிற்றிடை என்பது நூலளவு ...

6. அங்கு நாணங்கள் தூரிகை வண்ணங்களோ முகமென்று அதற்கொரு தலைநகரோ ...

7. ஒளியாய் தோன்றி நிழல் போல் மறைந்தாள் ...

8. இதை அடுத்தவன் சொன்னா கசக்கும்...

9. இயற்கையும் அவள் மேல் காதல் கொள்ளும் ...

10. கரைந்தோடும் நோய் என்னும் பாவங்களே ...

11. பொங்கும் மகிழ்வுடன் மங்கல நாளில் மங்கையை வாழ்த்த வந்தாரோ...

12. நாணமுன்னு வெட்கமுன்னு நாலுந் தான் இருக்குதுங்க ...


என் பழைய நினைவுகளிலிருந்து சுரண்டி எடுத்துப் பதித்ததால், சொற்தவறுகள் இருக்கலாம்! மன்னிக்கவும், திருத்தவும்!


என்றென்றும் அன்புடன்
பாலா
*************************************

Thursday, June 22, 2006

பெரியார் திரைப்பட சர்ச்சை

இயக்குனர் ஞானராஜசேகரன் பெரியாரின் வாழ்க்கை வரலாற்றை திரைப்படமாக எடுக்கவிருப்பதும், அதில் பெரியார் வேடத்தில் சத்யராஜும், மணியம்மையாக நடிக்க குஷ்பூவும் தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பதாகவும், இத்திரைப்படத்திற்காக திராவிட கழகத்தினர் தமிழ்நாடு முழுதும் நிதி திரட்டுவதாகவும் செய்தி வெளி வந்தது. இதைத் தொடர்ந்து, மணியம்மையாக நடிக்க குஷ்புவுக்கு என்ன தகுதியிருக்கிறது என்றும், அப்பாத்திரத்தில் நடிக்க ஒரு தமிழச்சி நடிக்க ஒரு தமிழச்சி கூடவா கிடைக்கவில்லை என்றும் தி.க வினர் கொதிந்தெழுந்து விட்டனர் !

ஒரு வேடத்தில் நடிப்பதற்கு, ஒருவர் ஓரளவு திறமையும், அனுபவமும் உள்ள நடிக/நடிகையாக இருந்தாலே போதுமானது என்பது பகுத்தறிவாளர்களுக்குக் கூட புரியாமல் போனது ஆச்சரியாமாக இருக்கிறது ! மேலும் அவர் எந்த மொழிக்காரராக இருந்தால் தான் என்ன ? 'பாரதி' திரைப்படத்தில் நடித்த ஷிண்டே மகாராட்டிர மாநிலத்தைச் சேர்ந்தவர் தானே! தமிழ் தெரியாதவராக இருந்தும் அற்புதமாகவே நடித்திருந்தார்.

மேலும், குஷ்பூ என்ற தனிநபரின் கற்பு குறித்த கருத்துக்கள் தங்களுக்கு உவப்பானதாக இல்லை என்பதற்காக, அவர் மணியம்மையாக நடிப்பதற்கு திகவினர் எதிர்ப்பு தெரிவிப்பது சற்றும் சரியில்லை. குஷ்பூ, பல திரைப்படங்களில் கவர்ச்சிக் கன்னியாக வலம் வந்திருப்பதை சுட்டிக்காட்டி கு.திருமாறன் என்ற தி.க. காரர், குஷ்பூவைப் போலத் தான் மணியம்மை இருந்திருப்பாரோ என்ற எண்ணம் இப்போதைய தலமுறையினரிடம் உருவாகி விடுமோ என்ற பதற்றத்தில் தான் திகவினர் ஆவேசப்படுவதாகக் கூறியிருக்கிறார் ! இது ஏற்றுக் கொள்ளத்தக்க ஒரு கருத்தா ???? இன்றைய தலைமுறையினர் நிஜத்திற்கும் நிழலுக்கும் வித்தியாசம் கூட தெரியாத அறிவிலிகளா என்ன ??? முதலில், அவரின் இக்கருத்து கண்டனத்துக்குரியது !

குஷ்பூ போலவே, கவர்ச்சி வேடங்களில் நடித்துள்ள மீனா, ரோஜா போன்ற நடிகைகள், சில திரைப்படங்களில் அம்மன் வேடமேற்று நடித்திருக்கின்றனர். இது அம்மன் பக்தர்களை இழிவுபடுத்துவதாக எடுத்துக் கொள்ள முடியுமா ? மேலும் திகவினரை விட மெஜாரிட்டியில் இருக்கும் ஆத்திகர்கள் யாரும் இதற்கு கொதித்தெழுந்ததாக நினைவில்லை ! சத்யராஜ் நாத்திகராக இருப்பதால் பெரியாராக நடிக்க தகுதியானவர் என்று வைத்துக் கொண்டாலும், தனது ஆரம்ப கால திரைப்படங்களில் வில்லனாக, பல கதாநாயகிகளை கற்பழிப்பவராக நடித்திருக்கிறார். எனவே, சத்யராஜ் போலவே பெரியார் இருந்திருப்பாரோ என்று கூறி அவரை எதிர்ப்பது எவ்வளவு அபத்தமானதோ, அது போலத் தான் குஷ்பு மணியம்மையாக நடிப்பதை எதிர்த்து கலாட்டா செய்வதும் கூட !!!

இறுதியாக, இத்தனை ஆண்டுகள் பெரியாரின் வாழ்க்கை வரலாற்றை நல்லதொரு திரைப்படமாக எடுக்க பெரியாரின் வழித்தோன்றல்கள் என்று கூறிக் கொள்ளும் எவரும் பெரிதாக முயற்சி எதுவும் மேற்கொண்டதாகத் தெரியவில்லை. அவ்வாறு செய்ய முன் வந்த ஞானராஜசேகரனின் (நடிக நடிகையரை தேர்ந்தெடுக்கும்) சுதந்திரத்தில் தலையிட்டு அவரை மிரட்டிப் பணிய வைக்கும் முறையில் இவ்வாறு ஆர்ப்பாட்டம் செய்வது எவ்வகையிலும் நியாயமான செயலாகத் தோன்றவில்லை !!!


என்றென்றும் அன்புடன்
பாலா

Monday, June 19, 2006

இடஒதுக்கீடு - உரத்த சிந்தனைகள்

1. IIT களிலும், IIM களிலும் ஆண்டுதோறும் பட்டம் பெற்று வெளிவரும் மாணவர்களில் பெரும்பாலோர், முற்பட்ட வகுப்பினரே என்ற நிலைமை, தகுதி (Merit) உடையவர் பலரும் முற்பட்ட வகுப்பைச் சேர்ந்தவர்கள் என்பதை பறை சாற்றினாலும், தகுதிக்கு, பலமான அடிப்படைக் கல்வி ஒரு முக்கியக்காரணம் இல்லையா ? அந்த வாய்ப்பு கிடைக்காதவர்களை தகுதியற்றவர் என்று கூற முடியுமா ? தற்போது படிப்பால் உயர்ந்துள்ள பிற்படுத்தப்பட்டவரில் 75 சதவிகிதத்தினர், பெற்றோர் அல்லது நண்பர்கள் வாயிலாக அறிவு பூர்வமான ஆதரவு எதுவும் கிடைக்கப் பெறாதவரே. அதனால், தரமான அடிப்படைக் கல்வி அனைவருக்கும் கிடைக்க வல்ல சூழலை முதலில் உண்டாக்குவது அவசியமான ஒன்று. இதன் மூலம், பல தரப்பினரும் தகுதி அடிப்படையில் போட்டியிடவல்ல காலம் வரும் வரையில், இடஒதுக்கீடு தேவையான ஒன்றாகவே தோன்றுகிறது.


2. அடுத்து, OBC யில் உள்ள creamy layer தரப்பினரையும், முற்பட்ட வகுப்பைச் சேர்ந்த ஏழை மக்களையும் இடஒதுக்கீட்டில் சமனாகக் கருதும் வகையில் ஒரு கொள்கையை உருவாக்குவது, சமூகத்தில் உள்ள அனைத்து தரப்பினரையும் ஒருங்கிணைத்து, இடஒதுக்கீட்டை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்ல ஒரு சுமுகமான சூழல் ஏற்பட பெருமளவு உதவும் என்பது என் தனிப்பட்ட கருத்து.


3. IIT மற்றும் IIM களில் படிப்பவர்களுக்கு எதற்கு சாமானியரின் வரிப்பணத்திலிருந்து அரசு, கல்விக் கட்டணத்தில் மானியம் வழங்க வேண்டும் ? இக்கல்லூரிகளில் பயில்பவர்களில் பெரும்பாலோர் பொருளாதாரச் சூழல் நன்றாக உள்ள குடும்பங்களிலிருந்து வருபவர்கள் தான். நுழைவுத் தேர்வுக்கு நிறைய செலவு செய்து பயிற்சி மேற்கொண்டு தேர்வெழுதுபவர்கள் தான் ! எப்படியும் இக்கல்லூரிகளிலிருந்து பட்டம் பெற்று வெளிவரும் மாணவர்களில் 90 % சதவிகிதம் பேர் அயல்நாடு சென்று விடுகின்றனர். மேலும், படிப்பு முடிந்தவுடன், அவர்களுக்கு நல்ல சம்பளத்தில் வேலை கிடைக்கும் வாய்ப்பு உள்ளது. அதனால், தேவையென்றால், படிப்புக்கு கடனுதவி மட்டும் வழங்குவதே சரியானது.

என்றென்றும் அன்புடன்
பாலா

Sunday, June 18, 2006

"தேன்கூட்டில்" ஒரு தேனீயானேன்!

ஜூன் 15 அன்று, 'இன்றைய வலைப்பதிவராக' தேன்கூட்டில் என்னைப் பற்றிய அறிமுகமும், என் வலைப்பதிவு குறித்த சிறு விமர்சனமும் வெளி வந்தன. முதற்கண், தேன்கூடு ஆசிரியர் குழுவுக்கு என் மனமார்ந்த நன்றி !

இதுவரை என் வலைப்பதிவு பற்றி வலையில் வெளிவந்த ஒரு சில குறிப்புகளிலிருந்து இது வித்தியாசமாக அமைந்த ஒன்று ! எனது பல பதிவுகளை வாசித்து, அதன் பின் சுவாரசியமாக எழுதப்பட்ட நல்லதொரு விமர்சனமாக இதைக் கருதுகிறேன். இதனால் என் எழுத்துக்களுக்கு மேலும் பல வாசகர்கள் கிடைப்பார்கள் என நம்புகிறேன். 'தேன்கூட்டில்' ஒரே ஒரு நாள் 'ராணி தேனீ' ஆனது குறித்து மிக்க மகிழ்ச்சி அடைகிறேன் :)

தேன்கூட்டில் வந்த விமர்சனம் கீழே:

கோவை GCT கல்லூரியில் படித்து சென்னையில் பணிபுரியும் இவர், கவிதைகள்,பாசுரங்கள், அரசியல், கிரிக்கெட், திரைப்பாடல்கள், கதைகள் என்று பல துறைகளையும் தொடுபவர்.
[ஆஹா, ஆல்ரவுண்டர் தகுதியை கொடுத்து, பொறுப்பை அதிகம் ஆக்கி விட்டீர்கள் !]

இவரது இடுகைகளில் 'சிறுவயது சிந்தனைகள்', 'பல்லவியும் சரணமும்' போன்றவைஅதிகம் சிலாகிக்கப்பட்டவை.
[இவை எனக்கு நிறைய வாசகர்களை பெற்றுத் தந்தவை, இவற்றால் தான் முதலில் அறியப்பட்டேன்.]

வலைப்பதிவர் தேசிகனால் [இவர் சாதாரணமான ஆளா என்ன ?] அறிமுகப்படுத்தப்பட்ட 'என்றென்றும் அன்புடன்' பாலாவின் எழுத்துக்களில் நகைச்சுவை உணர்வும் இழையோடும், ஆத்மார்த்தமான நேசமும் தென்படும்.
[நன்றி]

சுஜாதாவின்எழுத்துக்களை ஆழமாக ரசிப்பவர்.
[ஐயோ, ரவி ஸ்ரீநிவாஸோடு சண்டை வரும் அபாயம் ஏற்பட்டு விடும் போலிருக்கிறதே ;-)]

அவ்வப்போது இவரது தோழர்களுக்கு பகிரங்ககடிதம் எழுதி நினைவலைகளில் மூழ்குபவர்.
[என் ஆத்ம நண்பன் குறித்த பதிவுகளை நினைவு கூர்ந்ததற்கு ஸ்பெஷல் நன்றி!]

வலைப்பதிவுகள் தவிர, திண்ணை, தமிழோவியம்,
அந்திமழை போன்ற இணைய பத்திரிக்கைகளிலும் இவரது படைப்புகள் வெளிவந்திருக்கின்றன.

இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக தமிழ் வலைப்பதிவுகளில் ஆர்வமுடன் பங்கேற்றுவரும் 'என்றென்றும் அன்புடன்' பாலாவின் நகைச்சுவை பதிவுகள் பலராலும் ரசிக்கப்படுபவை. இவரது பதிவினைப் பற்றி அவரே எழுதிய இடுகை இது.
[சுயதம்பட்டத்தை சுட்டிக் காட்டி விட்டீர்கள் :)]

என்றென்றும் அன்புடன்,
பாலா

Saturday, June 17, 2006

Reservation குறித்து மூன்று கேள்விகள்

'தலைப்பு' ஊக்கம்: அன்புக்குரிய 'பெனாத்தலார்'

1. பிற்படுத்தப்பட்டவரில், Creamy Layer வகையினர் சிறிய சதவிகிதமே இருக்கையில், அவர்களை 27% உயர்கல்வியில் இடஒதுக்கீட்டிலிருந்து விலக்கி வைப்பதற்கு, சிலர் ஏன் ஆரவார எதிர்ப்பு தெரிவிக்கின்றனர் ? இதற்கு சுயநலம் தவிர வேறு ஏதாவது காரணம் இருக்க முடியுமா ? கம்யூனிஸ்ட்கள் Creamy layer-ஐ விலக்கி வைப்பதற்கு ஆதரவாக குரல் எழுப்பியது, இது குறித்து மத்திய அரசுக்கு சரியான செய்தியை அனுப்பியிருக்கும் என்று நம்பலாம்.

2. திரு.ராமதாஸ், Creamy Layer-க்கு ஆதரவாக, ஒருவர் நூறு பன்றிகள் வைத்திருந்து, ஆண்டுக்கு ஒரு லட்சம் சம்பாதித்தும், அவர் குடும்பத்தில் ஒருவர் கூட படிக்காமல் இருப்பதற்கான சாத்தியத்தை (இந்த வார குமுதம் பேட்டியில்!) எடுத்துக் காட்டி, பொருளாதார அளவுகோல் கூடாது என்கிறார் ! நல்ல உதாரணம் தான் ! இதற்கு எதிர்மறை லாஜிக்கின்படி, பொருளாதார பற்றாக்குறையினால், தகுதியிருந்தும் படிக்க வழியில்லாத முற்படுத்தப்பட்டவருக்கு இடஒதுக்கீட்டில் ஒரு சிறு சதவிகிதம் தருவதில் என்ன தவறு ?

3. தொடக்கக் கல்வியில் பிற்படுத்தப்பட்டவருக்கு 25% சதவிகித இடஒதுக்கீடு என்பதை கிடப்பில் போட்டு விட்டு, உயர்கல்வியில் மட்டும் இடஒதுக்கீட்டை அமலுக்கு கொண்டு வரும் இந்த முயற்சி "ஓட்டு வங்கி அரசியல்" அன்றி, வேறென்னவாக இருக்க முடியும் ?

என்றென்றும் அன்புடன்
பாலா

Monday, May 29, 2006

GCT தோழனுக்கு ஒரு கடிதம் --- Part 4

கடிதத்தின் மூன்றாம் பகுதியை படித்து விட்டுத் தொடரவும் !

தோழனுக்கு ஒரு கடிதம் --- பகுதி 4
***************************************


என் அன்புக்குரிய ப்ரீதம்,

பொறியியற் படிப்பு முடிந்ததும், உனக்கு பெங்களூரில் நல்ல வேலை கிடைத்தது. நான் சில மாதங்கள் மும்பையில் ஒரு நுண்ணணுவியல் பத்திரிகையில் பணி புரிந்து விட்டு பின் பெங்களூரில் ஒரு பொது நிறுவனத்தில் வேலைக்குச் சேர்ந்தேன். மீண்டும், அரட்டை, சினிமா, ஊர் சுற்றல் என்று மாலைப் பொழுதுகளை ஜாலியாகக் கழித்தோம். கல்லூரிக் காலத்தில், வந்தனாவைப் பற்றிய உனது உணர்வுகளை அதிகம் வெளிக்காட்டாத நீ, ஓர் இரவுக் காட்சி பார்த்து விட்டு திரும்பும்போது, ஓர் இந்திரா நகர் பூங்காவில் அவள் மேல் உனக்கிருந்த காதலை ஒப்புக் கொண்டாய். அக்காதலை சில காரணங்களுக்காக அவள் நிராகரித்ததையும் சுயபச்சாதாபத்துடன் கூறினாய். அந்த நேரம் ஒரு புதியவனாக நீ எனக்குத் தோன்றினாய்! அந்த புறக்கணிப்பு உன்னிடம் ஒரு பக்குவத்தை ஏற்படுத்தியிருந்ததையும் என்னால் உணர முடிந்தது.

அந்த இந்திரா நகர் பூங்காவில், பெங்களூரின் குளிரிரவுப் பொழுதுகளில், கலீல் கிப்ரான் கவிதைகள், உன் ஆன்மீகத் தேடல்கள், எதிர்கால லட்சியங்கள், அப்போது நீ ஈடுபட்டிருந்த மென்பொருள் உருவாக்கம் என்று பல விடயங்கள் குறித்து ஒரு வித லயிப்புடன் நீ பேசியதை, நேரம் போவது தெரியாமல் நான் கேட்டிருக்கிறேன்! உனக்கு நினைவிருக்கிறதா ? பிரிகேட் சாலையில் இருந்த "The Pub"-இல், பக்கத்து டேபிளில் அமர்ந்திருந்த ஒரு வைர வியாபாரியிடமும், அவரது ஆப்பிரிக நண்பரிடமும் உன்னை நீயே அறிமுகப்படுத்திக் கொண்டு, உன் பேச்சுத்திறனை மூலதனமாக்கி, அவர்களை குடுவை குடுவையாக பீரும், நொறுக்குத் தீனியும் வாங்கித் தர வைத்த உன் சாமர்த்தியத்தை என்னவென்று சொல்ல !

நான் ONGC-யில் வேலை நிமித்தம் மீண்டும் மும்பை சென்று விட்ட பின், ஒரு சில அற்புதமான கடிதங்களை எனக்கு நீ எழுதியிருக்கிறாய். அவை, இன்னும் என் வசம் பத்திரமாகவே உள்ளன. உன் சுபாவத்திற்கு தகுந்தாற் போல், பெங்களூர் வேலையை உதறி விட்டு, சென்னையில் ஒரு அயல்நாட்டு நிறுவனத்தில் பணிக்குச் சேர்ந்தாய். பணி நிமித்தம் நீ ஒரு தடவை (1987) மும்பை வந்தபோது ஏற்பட்ட சந்திப்பிற்குப் பிறகு, உன்னை நான் இதுவரை பார்க்கவில்லை. நீ எங்கிருக்கிறாய் என்பதை நான் அறிந்தும், நமது அடுத்த சந்திப்பிற்காகக் காத்திருப்பதைத் தவிர வேறு மார்க்கமில்லை எனக்கு !

உன்னைப் பற்றி சில விடயங்கள் நண்பர்கள் மூலம் தெரியப் பெற்றேன். புட்டபர்த்தி சாய்பாபாவிடம் மிகுந்த ஈடுபாடு கொண்ட நீ, புட்டபர்த்தியில் அமைந்துள்ள 'Sai Institute of Technology' யில் விரிவுரையாளராக வேலைக்குச் சேர்ந்தது பற்றியும், சாய்பாபாவின் நேர்காணலுக்காக பல லட்சம் பேர் காத்திருந்த வேளையில், அவரை எப்போது வேண்டுமானாலும் சந்திக்க, அவரிடம் பேச உனக்களிக்கப்பட்ட சலுகை குறித்தும், அங்கு ஆன்மீகத்தில் உன்னை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டு ஒரு யோகி போல் வாழ்ந்தது குறித்தும் கேள்விப் பட்டேன்.

நீ எனக்குப் பரிசாக வழங்கிய ஒரு புத்தகத்தில் நீ எழுதிக் கொடுத்த "BETWEEN HERE AND THERE, IS ETERNITY, BETWEEN NOW AND THEN, IS INFINITY!" என்ற அற்புதமான வாசகத்தை நினைவு கூர்ந்து இந்த மடலை நிறைவு செய்கிறேன்!

என்றென்றும் அன்புடன்
பாலா
**********************************

EPILOGUE:

நண்பன் நாராயணன் IES-இல் சிறப்பாகத் தேர்ச்சி பெற்று தொலைப்பேசித் துறையில் சீனியர் டிவிஷனல் பொறியாளராக உயர்ந்து, பின் அதை விடுத்து, தற்போது பூனாவில் ஒரு பன்னாட்டு நிறுவனத்தில் உயர்ந்த பதவியில் இருக்கிறான். ஆனால், பேச்சில், அடக்கத்தில் அதே பழைய 'நாரி' தான்!

'மொட்டை' ஷியாம், ஓமானில் சில ஆண்டுகள் வேலை செய்து விட்டு, தற்போது Bahwan's குரூப்பைச் சார்ந்த ஒரு மென்பொருள் நிறுவனத்தின் சென்னைக் கிளையில் உயர் பதவியில் இருக்கிறான். இன்றும் சனி ஞாயிறுகளில் கிரிக்கெட் விளையாடுகிறான்!

'Badoo' என்கிற செல்வராஜ் சிறிது காலம் HCL-இல் பணி புரிந்து விட்டு, கடந்த 10 வருடங்களாக அமெரிக்காவின் மேரிலாண்ட் மாகாணத்தில் தன் மனைவியோடும் (அவனது மாமா பெண் தான்!) இரு மகள்களோடும் வாசம் செய்கிறான்! ஒரு பெரிய அமெரிக்க நிறுவனத்தில் டைரக்டராக வேலை!

GS என்கிற ஸ்ரீராம் மும்பையில் சில வருடங்கள் டாடா எலெக்ட்ரிக் நிறுவனத்தில் வேலை செய்து விட்டு பின்னர் மேற்படிப்புக்காக அமெரிக்கா சென்று MS படித்து முடித்து, நல்ல வேலை கிடைத்து, திருமணமாகி, மனைவியுடனும், மகனுடனும், முன்போலவே நண்பர்களிடம் 'கடி' ஜோக்குகள் சொல்லிக் கொண்டு, டென்வரில் மகிழ்ச்சியாக வாழ்ந்து வருகிறான்.

'Vasco' என்கிற வசந்த்குமார், IIM, கல்கத்தாவில் மேலாண்மை படிப்பை முடித்து, பின் NIIT-இல் பணி புரிந்தபோது ஒரு முறை சிறந்த மேலாளருக்கான விருது வென்று, பணி நிமித்தம் பல வெளிநாடுகளுக்கு செல்லும் வாய்ப்புகள் பெற்று, தற்போது கலிபோர்னியாவில் 'ORACLE' நிறுவனத்தில் ப்ராஜெக்ட் டைரக்டராக இருக்கிறான். தலைமுடியில் முக்கால்வாசி இழந்திருந்தாலும், குணத்தில் அதே பழைய வசந்த் தான்!

'ராம்ஸ்' என்கிற ராமச்சந்திரன் சிறிது காலம் ISRO நிறுவனத்தில் வேலை செய்து விட்டு, MS படிக்க அமெரிக்கா சென்றதிற்கு பின்னால் அவனுடன் தொடர்பு இல்லை. அவன் ஹிப்பி வாழ்க்கை வாழ்வதாக நண்பன் ஒருவன் மூலம் கேள்விப் பட்டேன்.

எங்களுக்கு வகுப்பெடுத்த LP மேடம் இப்போது GCT கல்லூரியில் நுண்ணணுவியல் துறைக்கு தலைவராக உயர்ந்துள்ளார்!

இறுதியாக, எனது இந்த மிக நீண்ட கடிதத்தின் நாயகனான, என்னுயிர் சிநேகிதன் ப்ரீதம் இன்று உயிருடன் இல்லை! எங்களது கடைசி மும்பை சந்திப்பு (1987) நிகழ்ந்து பல மாதங்களுக்குப் பிறகு நான் சென்னைக்கு விடுமுறைக்காக வந்தேன். அவன் ஒரு மாதத்திற்கு முன் இறந்து விட்ட செய்தியை Obituary-யில் பார்த்த எனக்கு பயங்கர அதிர்ச்சி ஏற்பட்டது! நானும் ஷியாமும் அவன் தாயாரை சந்தித்துப் பேசியபோது, பெங்களூர் ஒயிட்·பீல்ட் அருகே ஒரு வேனில் பயணம் செய்தபோது ஏற்பட்ட விபத்தில், சம்பவ இடத்திலேயே ப்ரீதம் உயிரிழந்ததை அவர் கண்ணீருடன் கூறினார். நெற்றியின் பக்கவாட்டில் கூர்மையான ஏதோ ஒன்று துளைத்த ரத்தச் சுவடோடும், வலியை வென்ற மெல்லிய புன்னகையைத் தேக்கிய உதடுகளோடும் ப்ரீதம் இறந்து போனதையும், அதே வேனில் பயணம் செய்த தான் காயங்களோடு உயிர் பிழைத்ததையும் சொல்லி அவர் கலங்கியபோது, கடவுள் மீதே அசாத்திய கோபம் வந்தது. ப்ரீதம் தனது டைரியில் கடைசியாகப் பதித்திருந்த, "THIS LIFE IS LIKE WALKING ON A RAZOR'S EDGE!" என்ற வாசகம் என் நெஞ்சில் ஒரு வடு போல் தங்கி விட்டது.

ப்ரீதம் இறந்த சில மாதங்களில், மேற்படிப்புக்காக அமெரிக்கா சென்ற வந்தனாவும், ஒரு கோரமான கார் விபத்தில் இறந்து போனதை என்னவென்று சொல்வது !

(முற்றும்)

தோழனுக்கு ஒரு கடிதம் --- Part III

இப்பதிவை மீள்பதிவு செய்வதற்கு காரணங்கள் இரண்டு:

1. கடிதத்தின் இந்த மூன்றாவது பகுதியை பதித்து சில வாரங்களாகி விட்டதால், திடீரென்று இதன் இறுதிப் பகுதியை பதிக்க விரும்பவில்லை !

2. இந்த கடிதத்தின் "இறுதி அத்தியாயத்தை" இன்று மாலைக்குள் எழுதி பதித்து விடுகிறேன் !

முதல் மற்றும் இரண்டாம் பகுதிகளை படித்து விட்டுத் தொடரவும் !

தோழனுக்கு ஒரு கடிதம் --- பகுதி 3
****************************************

என் அன்புக்குரிய ப்ரீதம்,

கலை நிகழ்ச்சி மேடைகளில் ஏறியவுடன், ஏதோ ஒரு சக்தி உன்னை ஆட்கொண்டதை நான் உணர்ந்திருக்கிறேன். AD-APT என்று அழைக்கப்பட்ட ஒரு கலை நிகழ்ச்சி உனக்கு நினைவிருக்கிறதா ? அது, பொருட்களை வித்தியாசமாக, சுவைபட, ஒரிஜினல் விளம்பரங்களை நையாண்டி செய்யும் வகையில் வடிவமைக்கப்பட வேண்டிய ஒரு போட்டியாகும். அதில் உன்னுடன் பங்கேற்ற நம் நண்பர்களை எண்ணிப் பார்க்கிறேன்.

நிகழ்ச்சியின் விளம்பரக் குரலாக இருந்த, சரீரத்திற்கும் சாரீரத்திற்கு சம்மந்தமே இல்லாமல் கணீரென்ற குரல் கொண்ட, கல்லூரியில் இருந்த பெண்களெல்லாம் தங்களது உடன்பிறவாச் சகோதரனாக பாவித்த, கல்வியிலும், ஒழுக்கத்திலும் சிறந்தவனான 'நாரி' என்ற நாராயணன், "A short man with a high stature" என்ற கூற்றுக்கு இலக்கணமாகத் திகழ்ந்தான்!

'Badoo' என்கிற செல்வராஜ் தான் எவ்வளவு அழகாக சித்திரங்கள் வரைவான்! அவன் இருக்கும் இடத்தில் கலகலப்புக்கு குறைவிருக்காது.

'Vasco' என்கிற வசந்த்குமார், ஒரே சமயத்தில் GRE, TOEFL, GATE, CAT என்று பல தேர்வுகளையும் எதிர்கொண்டு அனைத்திலும் மிக அதிக மதிப்பெண்கள் பெற்று நம்மையெல்லாம் ஆச்சரியத்தில் ஆழ்த்தினான்!

GS என்றழைக்கப்பட்ட ஸ்ரீராம், எந்த திரைப்பட பாடலானாலும், கேள்வி ஞானத்திலேயே, அப்பாடலுக்கு அடிப்படையாக அமைந்த கர்னாடக ராகத்தை எளிதில் கண்டுபிடித்து விடுவான். அவன், விகடனின் 'மாணவர் பத்திரிகையாளராக' நம் கல்லூரியிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டவனும் கூட !

ஒரு குழுவாக, நீங்கள் AD-APT-இல் நடித்துக் கலக்கியதை நினைத்துப் பார்த்தால், இன்றும் சிரிப்பு வருகிறது. அந்நிகழ்ச்சியில் டார்ஸான் ஏதோ ஒரு டானிக்கை சாப்பிட்டதால் அவனுக்கு உண்டான உடல் வலிமைக்கு சான்றாக வரும், "When Tarzan farts, the whole jungle stinks" என்ற ஒரு வாசகத்தை கேட்டு அன்று கல்லூரி அரங்கமே அதிர்ந்தது !!!


மற்றொரு கலை நிகழ்ச்சியான MOCK PRESS-இல் (ஒரு பிரபலமான நபரைப் போல் ஒருவர் வேடமேற்று சீனியர் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் அடங்கிய ஒரு பத்திரிகையாளர் குழு கேட்கும் கேள்விகளுக்கு திறமையாக பதிலளிக்கும் நிகழ்ச்சி அது!) நீ ஒரு முறை கர்னல் கடா·பியாகவும், மற்றொரு முறை சாத்தானாகவும் வேடமேற்று பிரமிக்கத்தக்க வகையில் நடித்து, கேள்விகளை திறமையாக எதிர் கொண்டு அசத்தினாய். நீயும், நடிகர் சத்யராஜ் போலவே நெகடிவ் கேரக்டர்களில் பரிமளித்தவன்! சாத்தானாக நீ மேடையேறியவுடன், பார்வையாளர் மத்தியில் சாத்தானின் பக்தன் போல் நீ செட்டப் செய்திருந்த நண்பன் பாடலிநாதன் கூட்டத்திலிருந்து வெளிப்பட்டு, மேடையை நோக்கி விரைந்து உனக்கு சூடம் காட்டி, "ஓ சாத்தானே, எனக்கு அருள் பாலியுங்கள்!" என்று உன்னைப் பணிந்தது பயங்கர கலகலப்பை ஏற்படுத்தியது. அதைத் தொடர்ந்து நீ மேடையில் செய்த அட்டகாசங்கள் சொல்லி மாளாது!

பத்திரிகையாளர் குழுவில் இடம் பெற்ற வேதியியல் ஆசிரியரின் தலையில் நீ கை வைத்து, " Satan bless you!" என்று ஆசீர்வதித்து அவரை மிரள வைத்தாய். அது மட்டுமா, பார்வையாளர் மத்தியில் உட்கார்ந்திருந்த ஜுனியர் மாணவி வந்தனா (அழகும், திறமையும், பணமும் ஒரு சேர அமையப் பெற்றவரிடம் காணப்படும் ஒரு மெல்லிய அகந்தை அவளிடமும் இருந்தது. உனக்கும் கொஞ்சம் ஈகோ உண்டல்லவா? அதனால், you had a love-hate relationship with her) பக்கம் திரும்பி காமப்பார்வையுடன் (உன் நடிப்பைத் தான் சொல்கிறேன், கோபிக்காதே!), "Hi, beauty! What is your name ?" என்று வினவினாய்! பதில் சொல்ல எழுந்த வந்தனாவை, "You are ugly! I was asking the girl next to you!" என்று இடைமறித்து எரிச்சல் கொள்ள வைத்தாய்.

நிகழ்ச்சி முடிந்ததும், வந்தனா எங்களிடம், "He was a bit too much on stage, today!" என்று பொரிந்ததையும், அதற்கு வேதியியல் ஆசிரியர், "No, Preetham was actually three-much, today!" என்று நகைச்சுவையாகக் கூறியதையும், உன் நடிப்புக்குக் கிட்டிய பாராட்டாகவே நான் பார்க்கிறேன்!

நாம் மூன்றாமாண்டு பயில்கையில், இலங்கைப் பிரச்சினையை முன்னிறுத்தி தமிழ்நாட்டுக் கல்லூரி மாணவர்கள் வகுப்புகளை புறக்கணித்தனர். அதனால், நம் கல்லூரி நிர்வாகம் விடுதிகளிலிருந்து மாணவர்களை வெளியேற்றியது. சென்னைக்குச் செல்ல விரும்பாமல், நான், நீ, துரைராஜ், ராம்ஸ் என்கிற ராமச்சந்திரன் ஆகியோர், நண்பன் செல்வராஜுடன் குன்னூருக்கு மேல் அமைந்துள்ள பேலிதளா (Belidala) என்ற அவனது சொந்த கிராமத்துக்கு பயணப்பட்டது உனக்கு நிச்சயம் ஞாபகம் இருக்கும்.

அப்போது நாம் மேற்கொண்ட வனப்பயணம் (நானும், ராம்ஸ¤ம் சேற்று மணலில் வழுக்கி, ஓர் ஐம்பதடி கீழிருந்த பாறைப் பரப்பில் விழ இருந்தோமே!), நாம் கலந்து கொண்ட செல்வராஜ் (படுகர் இன) இல்லத் திருமணம், நமக்கு அங்கு கிடைத்த உற்சாகமான மரிதையான வரவேற்பு, சைட் அடித்த செல்வாவின் அழகான மாமா/அத்தைப் பெண்கள் மற்றும் உள்ளூர் தயாரிப்பில் உற்சாக பானங்கள் என்று எல்லாம் சேர்ந்து அது வாழ்வில் நாம் மறக்க முடியாத ஒரு பயணம் ஆனது, இல்லையா !

பொறியியற் படிப்பு முடிந்து, நாம் இருவரும் பெங்களூரில் சிறிது காலம் ஒன்றாகச் சுற்றினோமே, அந்த நாட்களையும் என்னால் மறக்க இயலாது !

என்றென்றும் அன்புடன்
பாலா


--- Concluding Part of this letter will be published today evening.

Saturday, May 06, 2006

GCT தோழனுக்கு ஒரு கடிதம் --- Part 3

முதல் மற்றும் இரண்டாம் பகுதிகளை படித்து விட்டுத் தொடரவும் !

தோழனுக்கு ஒரு கடிதம் --- பகுதி 3
****************************************


என் அன்புக்குரிய ப்ரீதம்,

கலை நிகழ்ச்சி மேடைகளில் ஏறியவுடன், ஏதோ ஒரு சக்தி உன்னை ஆட்கொண்டதை நான் உணர்ந்திருக்கிறேன். AD-APT என்று அழைக்கப்பட்ட ஒரு கலை நிகழ்ச்சி உனக்கு நினைவிருக்கிறதா ? அது, பொருட்களை வித்தியாசமாக, சுவைபட, ஒரிஜினல் விளம்பரங்களை நையாண்டி செய்யும் வகையில் வடிவமைக்கப்பட வேண்டிய ஒரு போட்டியாகும். அதில் உன்னுடன் பங்கேற்ற நம் நண்பர்களை எண்ணிப் பார்க்கிறேன்.

நிகழ்ச்சியின் விளம்பரக் குரலாக இருந்த, சரீரத்திற்கும் சாரீரத்திற்கு சம்மந்தமே இல்லாமல் கணீரென்ற குரல் கொண்ட, கல்லூரியில் இருந்த பெண்களெல்லாம் தங்களது உடன்பிறவாச் சகோதரனாக பாவித்த, கல்வியிலும், ஒழுக்கத்திலும் சிறந்தவனான 'நாரி' என்ற நாராயணன், "A short man with a high stature" என்ற கூற்றுக்கு இலக்கணமாகத் திகழ்ந்தான்!

'Badoo' என்கிற செல்வராஜ் தான் எவ்வளவு அழகாக சித்திரங்கள் வரைவான்! அவன் இருக்கும் இடத்தில் கலகலப்புக்கு குறைவிருக்காது.

'Vasco' என்கிற வசந்த்குமார், ஒரே சமயத்தில் GRE, TOEFL, GATE, CAT என்று பல தேர்வுகளையும் எதிர்கொண்டு அனைத்திலும் மிக அதிக மதிப்பெண்கள் பெற்று நம்மையெல்லாம் ஆச்சரியத்தில் ஆழ்த்தினான்!

GS என்றழைக்கப்பட்ட ஸ்ரீராம், எந்த திரைப்பட பாடலானாலும், கேள்வி ஞானத்திலேயே, அப்பாடலுக்கு அடிப்படையாக அமைந்த கர்னாடக ராகத்தை எளிதில் கண்டுபிடித்து விடுவான். அவன், விகடனின் 'மாணவர் பத்திரிகையாளராக' நம் கல்லூரியிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டவனும் கூட !

ஒரு குழுவாக, நீங்கள் AD-APT-இல் நடித்துக் கலக்கியதை நினைத்துப் பார்த்தால், இன்றும் சிரிப்பு வருகிறது. அந்நிகழ்ச்சியில் டார்ஸான் ஏதோ ஒரு டானிக்கை சாப்பிட்டதால் அவனுக்கு உண்டான உடல் வலிமைக்கு சான்றாக வரும், "When Tarzan farts, the whole jungle stinks" என்ற ஒரு வாசகத்தை கேட்டு அன்று கல்லூரி அரங்கமே அதிர்ந்தது !!!


மற்றொரு கலை நிகழ்ச்சியான MOCK PRESS-இல் (ஒரு பிரபலமான நபரைப் போல் ஒருவர் வேடமேற்று சீனியர் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் அடங்கிய ஒரு பத்திரிகையாளர் குழு கேட்கும் கேள்விகளுக்கு திறமையாக பதிலளிக்கும் நிகழ்ச்சி அது!) நீ ஒரு முறை கர்னல் கடா·பியாகவும், மற்றொரு முறை சாத்தானாகவும் வேடமேற்று பிரமிக்கத்தக்க வகையில் நடித்து, கேள்விகளை திறமையாக எதிர் கொண்டு அசத்தினாய். நீயும், நடிகர் சத்யராஜ் போலவே நெகடிவ் கேரக்டர்களில் பரிமளித்தவன்! சாத்தானாக நீ மேடையேறியவுடன், பார்வையாளர் மத்தியில் சாத்தானின் பக்தன் போல் நீ செட்டப் செய்திருந்த நண்பன் பாடலிநாதன் கூட்டத்திலிருந்து வெளிப்பட்டு, மேடையை நோக்கி விரைந்து உனக்கு சூடம் காட்டி, "ஓ சாத்தானே, எனக்கு அருள் பாலியுங்கள்!" என்று உன்னைப் பணிந்தது பயங்கர கலகலப்பை ஏற்படுத்தியது. அதைத் தொடர்ந்து நீ மேடையில் செய்த அட்டகாசங்கள் சொல்லி மாளாது!

பத்திரிகையாளர் குழுவில் இடம் பெற்ற வேதியியல் ஆசிரியரின் தலையில் நீ கை வைத்து, " Satan bless you!" என்று ஆசீர்வதித்து அவரை மிரள வைத்தாய். அது மட்டுமா, பார்வையாளர் மத்தியில் உட்கார்ந்திருந்த ஜுனியர் மாணவி வந்தனா (அழகும், திறமையும், பணமும் ஒரு சேர அமையப் பெற்றவரிடம் காணப்படும் ஒரு மெல்லிய அகந்தை அவளிடமும் இருந்தது. உனக்கும் கொஞ்சம் ஈகோ உண்டல்லவா? அதனால், you had a love-hate relationship with her) பக்கம் திரும்பி காமப்பார்வையுடன் (உன் நடிப்பைத் தான் சொல்கிறேன், கோபிக்காதே!), "Hi, beauty! What is your name ?" என்று வினவினாய்! பதில் சொல்ல எழுந்த வந்தனாவை, "You are ugly! I was asking the girl next to you!" என்று இடைமறித்து எரிச்சல் கொள்ள வைத்தாய்.

நிகழ்ச்சி முடிந்ததும், வந்தனா எங்களிடம், "He was a bit too much on stage, today!" என்று பொரிந்ததையும், அதற்கு வேதியியல் ஆசிரியர், "No, Preetham was actually three-much, today!" என்று நகைச்சுவையாகக் கூறியதையும், உன் நடிப்புக்குக் கிட்டிய பாராட்டாகவே நான் பார்க்கிறேன்!

நாம் மூன்றாமாண்டு பயில்கையில், இலங்கைப் பிரச்சினையை முன்னிறுத்தி தமிழ்நாட்டுக் கல்லூரி மாணவர்கள் வகுப்புகளை புறக்கணித்தனர். அதனால், நம் கல்லூரி நிர்வாகம் விடுதிகளிலிருந்து மாணவர்களை வெளியேற்றியது. சென்னைக்குச் செல்ல விரும்பாமல், நான், நீ, துரைராஜ், ராம்ஸ் என்கிற ராமச்சந்திரன் ஆகியோர், நண்பன் செல்வராஜுடன் குன்னூருக்கு மேல் அமைந்துள்ள பேலிதளா (Belidala) என்ற அவனது சொந்த கிராமத்துக்கு பயணப்பட்டது உனக்கு நிச்சயம் ஞாபகம் இருக்கும்.

அப்போது நாம் மேற்கொண்ட வனப்பயணம் (நானும், ராம்ஸ¤ம் சேற்று மணலில் வழுக்கி, ஓர் ஐம்பதடி கீழிருந்த பாறைப் பரப்பில் விழ இருந்தோமே!), நாம் கலந்து கொண்ட செல்வராஜ் (படுகர் இன) இல்லத் திருமணம், நமக்கு அங்கு கிடைத்த உற்சாகமான மரிதையான வரவேற்பு, சைட் அடித்த செல்வாவின் அழகான மாமா/அத்தைப் பெண்கள் மற்றும் உள்ளூர் தயாரிப்பில் உற்சாக பானங்கள் என்று எல்லாம் சேர்ந்து அது வாழ்வில் நாம் மறக்க முடியாத ஒரு பயணம் ஆனது, இல்லையா !

பொறியியற் படிப்பு முடிந்து, நாம் இருவரும் பெங்களூரில் சிறிது காலம் ஒன்றாகச் சுற்றினோமே, அந்த நாட்களையும் என்னால் மறக்க இயலாது !

என்றென்றும் அன்புடன்
பாலா


--- மடல் இன்னும் விரியும்!

தேர்தல் 2006 - பிரச்சாரமும் வாக்குறுதிகளும்

1. தமிழ்நாட்டின் 2 பெரிய கட்சிகளும், இலவச கலர்டிவி / கணினி, 2 ரூபாய் / இலவச அரிசி, திருமணத்திற்கு 15000 ரூபாய் / 4 கிராம் தங்கம், விவசாயிகளுக்கு கடன் ரத்து, பல தரப்பினருக்கும் சலுகைகள், வேலை வாய்ப்பு, இலவசமாக விளைநிலம் ... என்று வரைமுறை இன்றி வாக்குறுதிகளை அள்ளி விட்டு, இன்னும் சில வருடங்களில் தமிழகத்தில் தேனும் பாலும் ஓடும் என்ற மாயையை ஏற்படுத்தி இருக்கும் நிலையில், சில கேள்விகள் எழுகின்றன.

இரண்டு வருடங்களுக்கு ஒரு முறை தேர்தல் வந்தால், மக்கள் மிக்க மகிழ்ச்சி அடைவார்கள் தானே :) "இலவசத்திலேயே" வாழ்க்கையை ஒட்டி விடலாமே ???

ஆட்சிக்கு வரும் கட்சி, வாக்குறுதிகளை நிறைவேற்றத் தவறினால், அக்கட்சியின் மேல் நடவடிக்கை எடுக்க தகுந்த வழிவகை செய்வது அவசியமில்லையா ? ஏதாவது வகையில் தண்டனை அவசியமாகிறது இல்லையா ?

வாக்கு கொடுத்து விட்டு, நிறைவேற்றாமல் இருப்பது மக்களை ஏமாற்றும் வேலையில்லையா ?

உச்சநீதி மன்றமும், தேர்தல் ஆணையமும், பாராளுமன்றமும் இதற்கு ஏன் முக்கியத்துவம் அளிக்க முன் வரவில்லை ? இது குறித்து ஆலோசனை செய்வது அவர்கள் கடமை இல்லையா ?

மொத்த பட்ஜெட்டையே தேர்தல் வாக்குறுதிகளாக்கி விடுவது அபத்தமில்லையா ?

இன்னும் எவ்வளவு நாட்கள் மக்களை இளிச்சவாயர்கள் என்று அரசியல்வாதிகள் நினைப்பார்கள் ?

பொதுவாக, மக்கள், கட்சிகள் அள்ளி வீசும் வாக்குறுதிகளை வைத்துத் தான் வாக்களிக்கிறார்களா ?


பதில் கூறுங்கள், நண்பர்களே !

2. மீடியா (அதாவது, சொந்தமாக டிவி, தினசரி) பலம் இல்லாத மற்ற கட்சிகள், தமிழகத்தின் 2 பெரிய கட்சிகள் செய்யும் பிரச்சாரத்திற்கு நடுவே காணாமல் போய் விடுகிறார்கள். அதனால் அவை, இந்த இரண்டு கட்சிகளில் ஏதாவது ஒன்றோடு கூட்டணி அமைக்க வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்படுகின்றன. அதனாலோ என்னவோ, தமிழகத்தில் மூன்றாவது அணி என்ற பேச்சுக்கே இடமில்லாமல் போய்விட்டது !!! தேர்தல் ஆணையம், டிவி வழி பிரச்சாரத்திற்கும் வழிமுறைகளை வகுக்க வேண்டும். ஜனநாயகத்தில், எல்லா கட்சிகளின் பிரச்சாரமும் மக்களை சரியாக சென்றடைவது அவசியமாகிறது இல்லையா ?

என்றென்றும் அன்புடன்
பாலா

Saturday, April 15, 2006

GCT தோழனுக்கு ஒரு கடிதம் --- Part 2

முதல் பகுதியை படித்து விட்டுத் தொடரவும் !

தோழனுக்கு ஒரு கடிதம் ! - Part II
****************************************

என் அன்புக்குரிய ப்ரீதம்,

முதலாண்டில் நாம் பயின்ற நேரம், ரேகிங் அதிகமாகவே இருந்தது. கிண்டல், கேலி என்பவை போக, பல சமயங்களில் சீனியர் மாணவர்கள் அடி உதையும் நமக்கு வழங்கினர். மேலும், நமது அறைகளில் இரவு எட்டு மணிக்கு மேல் விளக்கெரிவதற்கு தடா போட்டிருந்தனர். தவறி விளக்கெறிந்தால், ஆர்ப்பாட்டமாக கல் வீசி ஜன்னல் கண்ணாடிகளை உடைத்து வந்தனர். அதற்கெல்லாம் அசராமல், நம் அறை ஜன்னலுக்கு இரு கெட்டியான போர்வைகளை பாதுகாப்பு அரணாக்கி, நடு இரவு வரை துணிச்சலாக விளக்கை எரிய விட்டு, நீ ஏதாவது படித்துக் கொண்டிருப்பாய். நம் அறையைத் தவிர்த்துப் பார்த்தால், விடுதியே இருளில் மூழ்கியிருக்கும். இதனால், கடுப்பான சீனியர்கள் தொடர்ந்து கல் வீசியதில், நம் அறையின் ஜன்னல் கண்ணாடியை மொத்தமாக இழந்தது! இரு வாரங்களில் கல் வீச்சும் ஒய்ந்து போனது! அதனால், எட்டு மணிக்கு மேல் படிக்க விரும்பிய 'காந்தி' வகை மாணவ நண்பர்கள், நம் அறையை நோக்கி விட்டில் பூச்சிகள் போல் படையெடுத்து நம் உறக்கத்தை கெடுத்தது தான் மிச்சம்!

அது போலவே, சீனியர்களின் அடி உதையை நீ எதிர் கொண்ட விதமும் அபாரமானது. நம் சக மாணவர்கள் சீனியர்களுக்கு அஞ்சி, 6 மணிக்கு மேல் விடுதியை விட்டு வெளியே வர மாட்டார்கள். நீயோ (நடுக்கத்தை வெளிக்காட்டி கொள்ளாத என்னையும் இழுத்துக் கொண்டு!) வேண்டுமென்றே கல்லூரி வளாகத்தில் அங்குமிங்கும் நடை பயில்வாய். அதனால், சீனியர் மாணவர்களின் பார்வையில் விழுந்து, நமக்கு பல தடவை அடி உதை கிடைத்தது. ஆனால், நீ நினைத்தது போலவே, ஒரு கட்டத்தில், அவர்களுக்கே அது அலுத்துப்போய், நம்மை பிடித்துப்போய், சீக்கிரமே சீனியர்களில் பலர் நமக்கு காட்·பாதர்களாகி விட்டனர். இதனால் நம் காட்டில் நல்ல மழை!

சீனியர் மாணவர்களிடமிருந்து பழைய பாடப் புத்தகங்கள் நமக்கு கிடைத்தன. அவ்வப்போது ஹோட்டலில் ஓசிச் சாப்பாடு, திரைப்பட இரவுக்காட்சிகளுக்கு விசேஷ அழைப்புகள், சீனியர் விடுதிகளுக்கு தங்கு தடையின்றி சென்று வர அனுமதி, சீனியர் மாணவிகளுடன் கடலை என்று பல அனுகூலங்கள் வாய்க்கப் பெற்றன. ஒரு முறை, ராகம் (தானம், பல்லவி!) திரையரங்கில் 'முந்தானை முடிச்சு' பார்த்து விட்டு, சீனியர்கள் சிலரோடு நாம் ஜட்கா வண்டியில் விடுதிக்கு திரும்பியது உனக்கும் மறந்திருக்காது என்று எண்ணுகிறேன்!

நீ சற்று வசதியான குடும்பத்தில் பிறந்தவன். மாதத்தின் முதல் தேதிகளில் உன் வீட்டிலிருந்து செலவுக்கு மணியார்டரில் பணம் வந்தவுடன் நீ குபேரனாக உருவெடுப்பாய். நண்பர்கள் எங்களுக்கும் குஷி தான்! பாரி வள்ளலைப் போல் எங்களை அரவணைத்து, சினிமா, ஹோட்டல் என்று வற்புறுத்தி கூட்டிச் சென்று செலவு செய்வாயே! அதனால், மாதத்தின் கடைசி பத்து நாட்களில், டீ/பன் வாங்கக் கூட கையில் காசில்லாமல் குசேலன் போல் காட்சி அளிப்பாய். உன் முகராசியோ என்னவோ, யாராவது ஒருவர் கிருஷ்ணனாக மாறி, அந்த சமயங்களில் உன் தேவைகளை பூர்த்தி செய்வதை நான் பல முறை பார்த்திருக்கிறேன். ப்ரீதம் என்று பெயர் கொண்டதாலோ என்னவோ, கல்லூரியில் பலருக்கும் நீ பிரியமானவனாகத் திகழ்ந்தாய்!

உன்னுடனும், ஷியாமுடனும் பலமுறை சென்றுண்ட ஆர்.எஸ்.புரம் அன்னப்பூர்ணா உணவகமும்,
நாம் தேர்வு சயமங்களில் விஜயம் செய்த, வேளாண்மைப் பல்கலைக்கழக வளாகத்தில் அமைந்த "அக்ரி" வினாயகர் கோயிலும்,
நாம் ஆங்கிலத் திரைப்படங்கள் கண்டு களித்த சென்ட்ரல் திரையரங்கமும்,
மாலை நேரங்களில் உற்சாகமாக அரட்டை அடித்தபடி, நாம் தேங்காய் பன்னும் தேநீரும் சாப்பிட்ட, தடாகம் சாலைச் சந்திப்பில் அமைந்த டீக்கடையும்
என் ஞாபகத்தில் நினைவுச் சின்னங்கள் போல் குடியேறி விட்டன ! அதே போல், அன்னப்பூர்ணா உணவகத்து basement-இல் இருந்த 'சுகப்ரியா' Bar-யையும் நீ மறந்திருக்க மாட்டாய் தானே ;-)

சென்ட்ரல் திரையரங்கில், "History of the World - I" பார்த்து ரசித்ததும்,
ஸ்ரீவள்ளி டாக்கீஸில் தரையில் அமர்ந்து "கொக்கரக்கோ" படம் பார்த்ததும்,
வாடகை சைக்கிள் எடுத்துக் கொண்டு வேகு வேகென்று மிதித்து மருதமலை கோயில் சென்றதும்,
கொஞ்சமாக பீர் அருந்தி விட்டு நீயும் ஷியாமும் 'கோயில் யானை' சந்திரசேகரையும், 'பத்து' என்னும் பத்மநாபனையும் கலாய்த்ததும்,
எனக்கு சாருவிடம் ஒருவித ஈர்ப்பு இருப்பதாக (கொஞ்சம் இருந்தது!) எனக்குத் தெரியாமல் அவளிடம் சொன்னதில் அவள் என்னைப் பார்க்கும்போதெல்லாம் விநோதமாக நடந்து கொண்டதும்,
ஷியாமுடன் கட்டிய ஒரு பந்தயத்திற்காக, அறிமுகமில்லாத மிக அழகான முதலாண்டு மாணவி (பேர் நினைவிலில்லை!) ஒருத்தியிடம் சென்று, " I love you ! I will wait for your reply till tomorrow!" என்று அவளை அதிர்ச்சியில் உறைய விட்டு விடுவிடுவென்று திரும்பி வந்ததும்,
LP மேடம் வகுப்புகளில் attendance எடுக்கும்போதெல்லாம், "யெஸ், மதாம்!" (பிரெஞ்சில் மேடம் என்பதை 'மதாம்' என்பார்கள்) என்று வெறுப்பேற்றியதும்
மறக்கக்கூடிய விஷயங்களா, நண்பா !

உன் கூடப் பிறந்தவர் யாரும் இல்லாததால், தேர்வுக்கு முன் வரும் 'படிப்பு விடுமுறையில்' முக்கால்வாசி நேரத்தை சென்னையில் என் வீட்டிலேயே கழிப்பாய். என் அம்மா, பாட்டி, தம்பி, தமக்கை ஆகிய அனைவருக்கும் உன் மேல் மிகுந்த அன்பு உண்டு. அதுவும் என் தம்பிக்கு அக்காலத்தில் நீ ஆதர்ச நாயகனாக திகழ்ந்தாய்! என் குடும்பத்தோடு ஒன்றாக அமர்ந்து உண்ணும் (உன் வீட்டில் கிடைக்காத) வாய்ப்பிற்காக, எங்கள் வீட்டின் எளிமையான உணவைக் கூட மிகுந்த மகிழ்ச்சியோடு நீ ரசித்து உண்டதை இன்று எண்ணிப் பார்க்கையில், கண்ணில் நீர் திரையிடுகிறது, நண்பா!

கல்லூரி கலை நிகழ்ச்சி மேடைகளில் நீ பண்ணிய கலாட்டக்களை நமது கல்லூரித் தோழர்கள் இன்றும் மறக்கவில்லை!

என்றென்றும் அன்புடன்
பாலா


--- மடல் இன்னும் விரியும்!

Friday, April 14, 2006

சரத் - தவமாய் தவமிருந்து

*********************
*********************
*********************
*********************
*********************
தீபாரமணி என்ற அந்த தாயின் முதல் விமானப் பயணம் மிக்க பெருமை வாய்ந்ததாக அமைந்ததன் காரணம், அவரது தனயனின் அயராத உழைப்பும், சிறந்த கல்வியார்வமும் என்றால் அது மிகையாகாது ! இந்திய மேலாண்மை கழகம், அகமதாபாதில் (IIM-A) படித்துப் பட்டம் பெற்ற சரத்பாபு என்ற அவரது மகனின் பட்டமளிப்பு விழாவில் கலந்து கொள்வதற்காக அவர் மேற்கொண்ட பயணம் அல்லவா அது !

மடிப்பாக்கத்தின் அருகில் ஒரு குப்பத்தில் , மிகச்சிறிய ஒரு கூரை வீட்டில், மிகுந்த சிரமங்களுக்கிடையில் வளர்க்கப்பட்ட சரத், வாழ்வில் உயரத் துடிக்கும் பல ஏழை மாணவர்களுக்கு ஒரு சிறந்த எடுத்துக்காட்டு. சரத் பள்ளியில் பயின்ற காலகட்டத்தில், தீபாரமணி ஒரு பள்ளியில் மதிய உணவுத் திட்டத்தின் கீழ், தினம் 30 ரூபாய் கூலிக்கு சமையல் புரிபவராகவும், பின்னர் SSLC முடித்து ஆசிரியையாகவும் பணியாற்றியிருக்கிறார். சொற்ப வருமானத்தில் தனது நான்கு பிள்ளைகளை பராமரிக்க இயலாத சூழலில், வீட்டில் உணவுப் பண்டங்கள் தயாரித்தும், சரத் மூலம் அவற்றை தெருக்களில் விற்றும், அவர் வீட்டுச் செலவை ஈடு கட்ட வேண்டி இருந்தது.

சரத், கிங்க்ஸ் மெட்ரிகுலேஷன் பள்ளியில் படித்தபோது, எப்போதும் படிப்பில் முதல் மாணவராகத் திகழ்ந்தது, அவரது தாயாரின் கடும் உழைப்பையும், தன்னம்பிக்கையையும் வைத்துப் பார்க்கும்போது, அவ்வளவு ஆச்சரியமானதாகத் தோன்றவில்லை என்று கூறலாம் ! வீட்டில் மின்சாரம் இல்லை என்பதைக் கூட ஒரு பொருட்டாக நினைக்காமல், படிப்பை மட்டுமே தன் மூச்சாக எண்ணிய சரத்திற்கு ஊக்கமளித்த அவரது ஆசிரியர்கள், அவரது படிப்புக்கான செலவையும் ஏற்றனர்.

பின்னர் சரத், BITS, பிலானியில் பொறியியற் படிப்பு படித்தபோது, அணிவதற்கு நல்ல உடைகள் கூட அவரிடம் கிடையாது; அதை அவர் பொருட்படுத்தியதும் இல்லை ! அரசாங்க உதவி மற்றும் கடன் பெற்று பொறியியற் படிப்பை முடித்த சரத், Polaris நிறுவனத்தில் மூன்றாண்டு காலம் பணியாற்றினார். தனது கடன்களை அடைத்த பின்னர், CAT என்றழைக்கப்படும் IIM நுழைவுத் தேர்வுக்கு (இத்தேர்வு எவ்வளவு கடினமானது என்பது பெரும்பாலோர் அறிந்தது தான்!) தன்னை தயார்படுத்திக் கொள்ள கடுமையாக உழைத்தார். முதல் முறை மிக நன்றாக எழுதியும், தேர்வுக்கான கேள்விகள், தேர்வுக்கு முன்னரே வெளியான குளறுபடியால், சரத் தேர்ச்சி அடைய முடியாமல் போனது. மனம் தளராமல், இரண்டாம் முறை தேர்வெழுதி அபார மதிப்பெண்கள் பெற்றதால், இந்தியாவில் உள்ள ஆறு இந்திய மேலாண்மைக் கழகங்களிலிருந்தும் அவருக்கு நேர்முகத் தேர்வுக்கான அழைப்பு வந்தது !!!

மறுபடியும், படிப்புக்காக, கல்வி மானியத்திற்கு மேல் கடனும் வாங்க வேண்டியிருந்தது. இன்று, அகமதாபாதில் சரத் தொடங்கியுள்ள Food King Catering Services என்ற சிறிய நிறுவனத்தின் தொடக்க விழாவில், IIM-A யின் சேர்மனும், INFOSYS நிறுவனத்தின் தலைவருமான திரு.நாராயணமூர்த்தி பிரதம விருந்தினராக கலந்து கொண்டு சரத்திற்கு பெருமை சேர்த்துள்ளார் ! சரத் வாழ்வில் மென்மேலும் உயர நமது வாழ்த்துக்களைக் கூறுவோம்.

"என்ன தவம் செய்தீர்கள் அம்மா, இத்தகைய தவப்புதல்வனை ஈன்றெடுக்க!" என்று தான் அந்த உன்னதப் பெண்மணியை கேட்கத் தோன்றுகிறது !!!

என்றென்றும் அன்புடன்
பாலா
*********************
நன்றி: இந்து நாளேடு

Saturday, April 08, 2006

GCT கல்லூரி --- மலரும் நினைவுகள்

தோழனுக்கு ஒரு கடிதம் ! - Part I
*******************************************************
என் அன்புக்குரிய ப்ரீதம்,

உனது நட்பின் உன்னதத்தில் திளைத்த அந்த நாட்களை ஞாபகப்படுத்திப் பார்க்கையில், பறவைகள் ஒலி எழுப்பும் வனாந்திரத்தில், ஈரமான காலைப்பொழுது தரும் உளம் நிறை உற்சாத்தோடு, சிறு குழந்தையின் கரம் பிடித்து நடை பயிலும் உணர்வு எனக்கு !!

23 வருடங்களுக்கு முன்பு நடந்த நமது அந்த முதல் சந்திப்பு பளிச்சென்று நினைவில் நிற்கிறது. என் பெயர் இரண்டாவது தேர்வுப் பட்டியலில் இடம் பெற்றதால், நான் சற்று தாமதமாகத் தான் (வகுப்புகள் தொடங்கிய பின்) பொறியியற் கல்லூரியில் (GCT) சேர முடிந்தது. கல்லூரியில் சேர்வதற்கான ·பார்மாலிட்டிகளை முடித்து, எனக்கு ஒதுக்கப்பட்ட விடுதி அறைக்கு வந்து சேர மதியம் மேல் ஆகி விட்டது. விடுதியில் அவ்வளவாக ஆள் அரவமில்லை. சற்று நேரத்தில் முதலாண்டு மாணவர்கள் வகுப்புகள் முடிந்து வரத் தொடங்கினர். முதலில் வந்த சிலரிடம் நானே வலியச் சென்று என்னை அறிமுகப்படுத்தி கொண்டு அளவளாவிக் கொண்டிருந்தேன்.

சற்று நேரத்திற்கு பின், புயல் போல் அவ்விடத்திற்கு வந்த நீ, குட்டைச் சுவற்றின் மேல் ஏறி அமர்ந்து, பொதுவாக, "என்னப்பா, எதைப் பத்தி குரூப் டிஸ்கஷன் பண்ணிட்டு இருக்கீங்க ?" என்று வினவிய பின், கூட்டத்தில் புதியவனான என்னைப் பார்த்தவுடன் மலர்ச்சியோடு கையை நீட்டி, "Hi, I am Preetham from Madras, You must be from Madras, too !" என்று கூறி, நான் நீட்டிய கையைப் பற்றி குலுக்கினாய். அந்த இறுக்கமான கை குலுக்கலே, நம்மிடையே பின்னாளில் மலர்ந்த இறுக்கமான நட்புக்கு அச்சாரமாய் அமைந்தது !!!

பழகப் பழக நாம் நல்ல நண்பர்கள் ஆனோம். அப்போது ஓர் அறைக்கு இரு மாணவர்கள் என்றிருந்தனர். என்னை உன் (unofficial) ரூம்மேட் ஆக்கிக் கொள்வதற்காக, உன் ரூம்மேட் வாசுவை அறையிலிருந்து அப்புறப்படுத்த நீ எடுத்த பிரயத்தனங்களை சொல்லி மாளாது ! ஆரம்பத்திலிருந்தே உன்னைக் கண்டு சற்று மிரண்டிருந்த அவன், தன் பெட்டி படுக்கையை எடுத்துக் கொண்டு, அவனைப் போல் அமைதியாக இருந்த மாணவர்கள் தங்கியிருந்த அறையில் மூன்றாவது ஆளாக தஞ்சமடைந்தான். நான் உன் 'சக அறையர்' ஆனேன் (ஆக்கப்பட்டேன்!) !!! என் official ரூம்மேட் 'மொட்டைப்'பழனி தனிக்காட்டு ராஜா ஆனான் !!!

கல்லூரி வாழ்வின் பல சமயங்களில் வெளிப்பட்ட உன் பலவித திறமைகளைக் கண்டு வியக்காத நண்பர்களே இருக்க முடியாது. மொத்தத்தில் எங்களிடையே ஒரு சூப்பர் ஸ்டார் போல் நீ விளங்கினாய் !!! ஆங்கிலத்தில் நல்ல புலமை உனக்கிருந்தது. ஆங்கிலத்தில் சிறப்பாக கட்டுரைகள் எழுதுவாய், கவிதைகள் புனைவாய். ஆங்கிலப் பேச்சு போட்டிகளில் மடை திறந்தாற் போல் முழங்கி பல முறை பரிசுகள் வென்றிருக்கிறாய் !

படிப்பிலும் நீ கெட்டிக்காரன் தான். கேள்வி ஞானம் மிக்கவனாக நீ விளங்கியதில் எனக்கு ஆச்சரியம் ஏதுமில்லை ! எனக்கு நன்றாக நினைவிருக்கிறது! தேர்வு சமயங்களில், நானும் நீயும் ஒன்றாக படிப்போம். பல நேரங்களில் என்னை சத்தமாக படிக்கச் சொல்லி, மெத்தையில் கண் மூடி சயனித்தபடி நான் கூறுவதை உள்வாங்கிக் கொண்டு, சரியாக பன்னிரெண்டு அடித்தவுடன் குட்நைட் சொல்லி நீ உறங்கச் சென்று விடுவாய் !!! நானோ தொடர்ந்து காலை நான்கு மணி வரை படித்துக் கொண்டிருப்பேன். என் கடின உழைப்பின் பலனாக மொத்தத்தில் உன்னை விட மூன்று அல்லது நான்கு மதிப்பெண்கள் மட்டுமே அதிகம் பெற முடிந்தது கூட என் பாக்கியமே !!! நான் நல்ல மதிப்பெண்கள் பெற்றால் என்னை விட நீ தான் அதிகம் சந்தோஷப்பட்டிருக்கிறாய், நண்பா !!!

ஆங்கில இசை வீடியோக்களை பார்த்தே திறமையாக நடனம் ஆடக் கற்று, கல்லூரி கலை விழா ஒன்றில் அற்புதமாக நடனமாடி நீ பரிசு வென்றது என் நினைவில் பசுமையாக உள்ளது! விளையாட்டுகளிலும் நீ கலக்கியிருக்கிறாய், கிரிக்கெட் தவிர! ஹாக்கி, கால்பந்து, டேபிள் டென்னிஸ், கூடைப்பந்து, தடகளம், வாலிபால் என்று பல விளையாட்டு அணிகளிலும் இடம் பெற்று உன் திறமையை காட்டியிருக்கிறாய்.

ஆனால், கிரிக்கெட் அணி கேப்டன் 'மொட்டை' ஷியாமுடன் ஒரு தடவை மல்லுக்கு நின்று, அணியில் சேர்ந்து, துவக்க ஆட்டக்காரனாக களமிரங்கி, கண்மூடித்தனமாக மட்டையை வீசி, முதல் பந்திலேயே நடு ஸ்டம்பை இழந்து பரிதாபமாக நின்றது, ஏனோ என் நினைவுக்கு வந்து தொலைக்கிறது :) அதே போல, ஷியாம், ஒரு முறை, நம் கல்லூரி சார்பில் களமிரங்கி, உடுமலைப்பேட்டை கிரிக்கெட் கிளப்புக்காக அப்போது விளையாடிக் கொண்டிருந்த ராபின் சிங்கின் (அவர் வேகப்பந்து வீச்சாளராக அறிமுகமானவர்!) பௌலிங்கை அனாயசமாக எதிர்கொண்டு எடுத்த மின்னல் வேகச் சதத்தையும் என்னால் மறக்க முடியாது
!!!

நான் இன்று ஆங்கிலத்தில் ஓரளவு திறமையாக எழுதவும், பேசவும் செய்வதற்கு, நான் அன்று உன்னோடு பார்த்த பல ஆங்கில திரைப்படங்களும், நீ படிக்கத் தந்த புத்தகங்களும் காரணமாக அமைந்தன. உன்னிடமிருந்து, வாசிப்பனுபவம், அவைக்கஞ்சாமை, தியானம், தன்னம்பிக்கை, மனவுறுதி என்று பல நல்ல விஷயங்களை நான் கற்றுக் கொண்டேன். எனக்கு Richard Bach, Somerset Maughm, Kahlil Gibran, Aurobindo, Ayn Rand போன்றோரை அறிமுகப்படுத்தியவனும் நீயே !

ஆனால், உன்னுடன் சேர்ந்து வாழ்வதென்பது என்னைப் போன்ற ஒரு சாதாரணனுக்கு கடினமான ஒன்றாகவே ஆரம்பத்தில் இருந்தது. ஏனெனில், 'எதையும் ஒரு முறை' செய்து பார்ப்பதும், extremes-களில் நினைத்தபோது நிலை கொண்டு வாழ்வதும் உனக்கு மட்டுமே இயல்பானவை !!! ஒரு நான்கு மாதங்கள், வகுப்புகள், உடற்பயிற்சி, தியானம், கோயில்கள், படிப்பு, நேரத்துக்கு உறக்கம் என்று யாருடனும் அதிகம் உறவாடாமல் ஒரு யோகி போல் வாழ்வாய் ! திடீரென்று ஒரு நாள் அவையனைத்தையும் புறந்தள்ளி விட்டு, பாட்டு, கூத்து, நண்பர்களுடன் அரட்டை, இரவுக் காட்சிகள், உற்சாக பானங்கள், உச்சக்கடலை என்று உல்லாச வாழ்க்கைக்கு தாவி விடுவாய் ! அவ்வாறு உன் வாழ்க்கை முறையை நீ அடிக்கடி மாற்றுவது எனக்கு போகப்போக பழகி விட்டது. ஒரு சமயத்திலும், எதையும் என் மேல் நீ திணித்ததில்லை, எதற்கும் என்னை நீ வற்புறுத்தியதுமில்லை !!!

முதலாண்டில் நாம் பயில்கையில் அடிக்கடி நடந்தேறும் 'கல்லெறி வைபவம்' உனக்கு ஞாபகம் வருகிறதா ?

என்றென்றும் அன்புடன்
பாலா
*************************************************
--- மடல் இன்னும் விரியும் !

நன்றி நண்பரே !

வருகை தந்தமைக்கு நன்றி! உங்கள் மேலான கருத்துக்களை எதிர்பார்க்கிறேன்!
Related Posts with Thumbnails